யாழ்ப்பாணம் மாவட்ட எல்லையைக் கடக்க அதிகளவானோருக்கு பாஸ் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிருப்தி

யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்கு பயணிப்பதற்கு சுகாதார மருத்துவ அதிகாரிகளினால் அதிகளவானோருக்கு அனுமதியளிக்கப்படுகின்றன. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனையோருக்கு அனுமதியளிப்பதனைத் தவிர்த்து இறுக்கமான கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதற்கு மாகாண ஆளுநர், மாவட்டச் செயலாளர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்”

இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சுகாதார மருத்துவ அதிகாரியும் ஊரடங்கு நேரத்தில் மாவட்ட எல்லைகளினை தாண்டி பயணிக்க 300 மேற்பட்டவர்களுக்கு ஒரே நாளில் சான்றிதழ்களை வழங்குகின்றனர். அவை அத்தியாவசிய சேவைகளுக்குரித்தான அரச உத்தியோகத்தர்கள் அல்ல.

பெரும்பாலானவர்கள் மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்குவதாக கூறுபவர்கள்.

யாழ்ப்பாணத்தில் மொத்தம் 14 சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் ( MOH ) உள்ளன. மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவ்வாறு மாவட்ட எல்லையை கடக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2 ஆயிரம் நபர்கள் தவிர, மற்றவர்கள் அனைவரும் இப்போது பிரதேச செயலகத்தின் கடிதம் காரணமாக சுகாதார மருத்துவ அதிகாரிகளினால் சான்றிதழை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் சரியான முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும். மாவட்டச் செயலாளர் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் இருவரும் இணைந்து இதனை கட்டுப்படுத்த தேவையான ஒழுங்குமுறையை ஏற்படுத்த வேண்டும்.

மாகாண ஆளுநர், சம்பந்தப்பட்ட தரப்பினர் இது தொடர்பில் இறுக்கமான விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதனை உறுதிப்படுத்த வேண்டும் என்று வினயமாக கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு கட்டுப்படுத்தாதவிடத்து ஊரடங்கு உத்தரவு பயனற்றது என்பதனையும் குறிப்பிடுகின்றோம்.

இவ்வாறான கட்டுப்பாடின்றி அனைத்து மக்களையும் (அத்தியாவசிய சேவைகள் நீங்கலாக) மாவட்ட எல்லைகளை தாண்ட அனுமதிப்பது கோரோனா பரவுவதனை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இட்டுச் செல்லும் – என்றுள்ளது.

Related Posts