யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் பிரதேசத்தின் அவலம்! நீதி விசாரணை தேவை!

Moorstreet_jaffna_muslimயாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தின் இன்றைய அவல நிலையையும், யாழ்ப்பாணம் என்பது எதிர்காலத்தில் முஸ்லிம்கள் இல்லாத ஒரு மாவட்டமாக மாறக்கூடிய அபாயத்தையும் சுட்டிக் காட்டுகின்றது.

இது தொடர்பாக ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் “யாழ்ப்பாண முஸ்லிம் மண்ணைப் பாதுகாப்போம்” என்று தலைப்பில் ஒரு கட்டுரை பிரசுரம் ஆகியுள்ளது.

1990ம் ஆண்டுக்கு முன்னர் வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் முஸ்லிம்கள் சோனகதெரு, சாவகச்சேரி, சுன்னாகம், மண்கும்பான், பருத்தித்துறை, செம்மாதெரு, நயினாதீவு போன்ற பல பகுதிகளில் வசித்து வந்தார்கள். எனினும் 95% யாழ்ப்பாண முஸ்லிம்கள் சோனகதெரு பகுதியிலேயே வசித்து வந்தனர்.

யாழ்ப்பாண சோனகதெரு என்பது ஆங்கிலத்தில் Jaffna Moor Street என்று அழைக்கப்பட்ட பொழுதும், அது ஒரு தெரு ( Street ) அல்ல. யாழ்ப்பாணம் சோனகதெரு என்பது முஸ்லிம்கள் வாழ்ந்த ஒரு பெரும் பிரதேசம், அல்லது ஊர் ஆகும்.

யாழ்ப்பாணம் சோனகதெருவில் 12,000 வரையான முஸ்லிம் மக்களும், 2000 வரையான வீடுகளும் காணப்பட்டன. 4 ஜும்மா மஸ்ஜிதுகளும், இரண்டு முஸ்லிம் உயர்தரப் பாடசாலைகளும், 5 ஆம் வகுப்பு வரையான 4 ஆரம்பப் பாடசாலைகளும் காணப்பட்டன.

1990 ஆம் ஆண்டு புலிகளால் முஸ்லிம்களின் முற்றாக வெளியேற்றப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்தில் எந்த முஸ்லிம்களும் இருக்கவில்லை. 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது.

முஸ்லிம்களின் அதிகமான சொத்துக்களை புலிகள், குறிப்பாக அதிகமான இலத்திரனியல் சாதனங்கள், காஸ் சிலிண்டர்கள் போன்ற பொருட்களை ஆயிரக்கணக்கில் சில முஸ்லிம் செல்வந்தர்களின் பெரிய வீடுகளில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தனர்.

மிக முக்கியமாக, யாழ்ப்பணத்தில் 95% முஸ்லிம்கள் வாழ்ந்த சோனகதெருவின் 99% வீடுகள் மிகவும் நல்ல நிலையிலேயே இருந்தன. 1997 ஆம் ஆண்டு 19 பேர் கொண்ட முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்றனர். அப்பொழுது வீடியோக்களும் எடுக்கப்பட்டன.

சில முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மாதெரு பள்ளிவாசலில் தங்கிவிட்டனர்.

1995ம் ஆண்டு யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றியதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் எந்த யுத்தமும் நடைபெறவே இல்லை. 2009ம் ஆண்டு யுத்தம் முற்றாக முடிவடைந்து விட்ட பின்னர், யாழ்ப்பாணத்திற்கான பாதை திறக்கப் பட்டு முஸ்லிம்கள் சென்று பார்த்த பொழுது, சோனகதெரு முற்றாக அழிக்கப் பட்டு, வெறும் கற்குவியல்களாக காணப்பட்டது.

புலிகள் விட்டுச் சென்ற பொழுது நல்ல நிலையில் இருந்த வீடுகள், இராணுவ கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்த நிலையிலேயே சூறையாடப் பட்டன. வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள், நிலைகள், கூரைகள், கல்லுகள் என அனைத்தும் சூறையாடப்பட்டு, சோனகதெரு மயானம் போன்று காட்சியளித்தது.

2010ம் ஆண்டு மீள்குடியேறும் எண்ணத்துடன் சென்ற மக்கள், இந்தக் காட்சியைப் பார்த்ததும், மனமுடைந்து மீள் குடியேறும் எண்ணத்தையே கைவிட்டு, தமது காணிகளை முஸ்லிமல்லாதவர்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்க தொடங்கி விட்டார்கள்.

யாழ்ப்பாணம் சொனகதேருவிற்கு இந்த நிலைமை ஏற்பட யார் காரணம் என்று அயல் பிரதேச தமிழர்களை விசாரித்ததில், யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த சில முஸ்லிம்கள், தமிழ் கூலித் தொழிலாளிகளைக் கொண்டு வீடுகளை இடித்து, கட்டிடப் பொருட்களை செம்மாதெரு வீதியில் போட்டு விற்றதாக அறிய முடிகின்றது.

புலிகள் விட்டுச் சென்ற பொழுது நல்ல நிலையில் இருந்த வீடுகளை, யாழ்ப்பாணத்தின் சில முஸ்லிம் புல்லுருவிகளே நாசம் செய்து, ஒரு வரலாற்றையே அழிக்கும் கொடூர செயலை செய்துள்ளனர்.

இவர்கள் சோனகதெரு வீடுகளை அப்படியே விட்டிருந்தால், குறைந்த பட்சம் 80 % முஸ்லிம்கள் மீள்குடியேறி இருப்பார்கள். முஸ்லிம்கள் மீள்குடியேறும் எண்ணத்தைக் கைவிட முக்கிய காரணி, அவர்களின் வீடுகளும், அவர்கள் வாழ்ந்த பிரதேசமும் முற்றிலுமாக சிதைக்கப்பட்டமையே ஆகும்.

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு எதிரான மாபெரும் வரலாற்றுத் துரோகத்தை யார் செய்தார்கள் என்பது குறித்து சிலரின் பெயர்கள் மக்களால் குறிப்பிடப் பட்டாலும், ஊடக தர்மம் கருதி யாருடைய பெயரையும் இங்கே குறிப்பிடுவது நியாயமாக இருக்காது.

ஒரு இனத்தின் வரலாற்றையே இல்லாமலாக்கிய கொடியவர்கள் நிச்சயமாகத் தண்டிக்கப் பட வேண்டும். அரசாங்கம் இதற்கான முறையான விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைத்து, குற்றவாளிகளை இனம் கண்டு தண்டனை வழங்க முஸ்லிம்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மேற்படி இழி செயலில் ஈடுபட்ட சிலர், இன்றும் யாழ் சமூகத்தில் தம்மையும் தலைவர்களாகக் கட்டிக்கொண்டு, பல்வேறு உட்சதி வேளைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு சமுதாயத்தின் வரலாற்றையே அழித்த கயவர்களுக்கு உரிய தண்டனை வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கையின் முஸ்லிம் சமூகத் தலைவர்கள் முன்வர வேண்டும்.

எதிர்வரும் 15ம் திகதி ஆர்ப்பாட்டம் என்று அறிவித்துள்ள யாழ்ப்பாண முஸ்லிம் சம்மேளனம் இது குறித்தும் கவனம் செலுத்தி மகஜரொன்றை ஜனாதிபதியிடம் கையளிக்குமா?

யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கபினட் தர அமைச்சரான திரு டக்ளஸ் தேவானந்தா அவர்களாவது விசாரணைக் கமிசன் அமைக்கப் பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வழி செய்வாரா?

(ஜெனூபர்)
jenufar@hotmail.com

Related Posts