யாழ்ப்பாணத்தில் பழையபொருட்களைக் கொள்வனவு செய்வோர் கஞ்சா விற்பனையில்

யாழ்ப்பாணத்தில் பழைய பொருட்களைக் கொள்வனவு செய்வதாக தெரிவித்து வாகனங்களில் வருபவர்கள் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொது மக்களும் சிவில் அமைப்புக்களும் குற்றம்சுமத்தியுள்ளன.

யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போதே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுடன் இன்போது யாழ்ப்பாணத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் பாவனைகளை கட்டுப்படுத்துவது மற்றும் வீதி விபத்துக்களை தவிர்ப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

வியாபாரம் என்ற பெயரில் யாழ்பபாணத்திற்கு வரும் நபர்கள் சகல இடங்களுக்கும் சென்று போதைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரிவித்த பொதுமக்கள்,இவர்களது நடவடிக்கை தொடர்பாக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இவற்றைவிட பொலிஸாருக்கு தகவல் வழங்குவது நம்பகத்தன்மை அற்று காணப்படுவதால் இது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அத்துடன் பொலிஸ் நிலையங்களை நவீனமயப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதிகளவான பொலிஸாரை ஈடுபடுத்துவதுடன் புலனாய்வாளர்களையும் அதிகளவில் ஈடுபடுத்தி போதை கடத்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்தனர்.

அத்துடன் மணல் கடத்தல் செயற்பாடுகளை தடுப்பது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டிய மக்கள்,

கேரள கஞ்சா கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு யாழ்ப்பாணத்தில் மாத்திரம் நடவடிக்கை எடுக்காமல் அது எங்கிருந்து கொண்டுவரப்படுகின்றதோ அங்கும் இவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அந்தவகையில் இந்திய மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி, கேரள மற்றும் இந்திய கடல் எல்லைகளில் கஞ்சா போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த கலந்துரையாடலின்போது பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts