யாழ். மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சல் மீண்டும் தீவிரமாகப் பரவி வருகிறது. முக்கியமாக குருநகர், தெல்லிப்பளை, கொக்குவில் போன்ற பகுதிகளில் தீவரமான டெங்கு நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.இவற்றில் குருநகர், தெல்லிப்பளை ஆகிய பிரதேசங்களில் சுகாதாரத் திணைக்களம், உள்ளூராட்சி சபை, பொதுமக்கள், ஏனைய நிறுவனங்களின் ஒன்றிணைந்த செயற்பாட்டினால் நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டுள்ளது.
எனினும் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள கொக்குவில் பகுதியில் நோய் பரவல் அதிகரித்து வருவதுடன் ஏனைய பகுதிகளுக்கும் பரவக்கூடிய ஆபத்து நிலையைத் தோற்றுவித்துள்ளது.
அத்துடன் கொக்குவில் பகுதியில் டெங்கு நோய் தாக்கத்தினால் உயிரிழப்புச் சம்பவமொன்றும் ஏற்பட்டள்ளது. பொது மக்கள், உள்ளூராட்சி சபையின் ஒத்துழைப்பு உரிய முறையில் கிடைக்கப் பெற்றாலே இந்தப் பகுதியிலும், ஏனைய பகுதிகளிலும் டெங்கு நோய் பரவுவதையும் இதனால் ஏற்படக்கூடிய அநியாயமான உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியுமென சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் 8ம் திததி முதல் 14ம் திகதி வரையான காலப்பகுதி விசேட டெங்கு தடுப்பு வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.