ஐங்கரன் மீடியா சொலுயூஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டிலான தமிழ் சிங்களப் புத்தாண்டு கோடைகாலத் திருவிழாவின் கலை நிகழ்வுகள் யாழ் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாரம்பரிய சுதேசிய வைத்திய பிரதி அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளும், வர்த்தக கண்காட்சி, விற்பனையும், சிறுவர்களுக்கான மகிழ்விப்புச் செயற்பாடுகளும் இடம்பெற்றன.
தொடர்ந்து இரவு வேளையில் தென்னிந்திய இன்னிசைக்குழுக்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தெல்லிப்பளையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள்
இதேவேளை தெல்லிப்பளை பொலிசாரும், தெல்லிப்பளை பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய புத்தாண்டு விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் சனிக்கிழமை மல்லாகம் மகா வித்தியாலய மைதானத்தில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராய்ச்சி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.ஸ்ரீமோகனன், காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நந்தன ரணவீரா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டுக்களும் மரதநோட்ட நிகழ்வுகளும் நடைபெற்றதுடன், இரவு இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
சுன்னாகத்தில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வுகள்
சுன்னாகம் பொலிசாரும் உடுவில் பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய புத்தாண்டு விளையாட்டுப் போட்டி மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மைதானத்தில் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.எல்.துஸ்மிந்தா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொகான் டயஸ், 513 ஆவது படைகளின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பெரெரா றொகான், வட மாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இராமநாதன் மகளிர் கல்லூரி அதிபர் திருமதி எஸ்.கமலராணி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.