கொக்குவில் பிரம்படி வீதியில் நேற்று நண்பகல் தனியே நடந்து சென்றுகொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவியின் கழுத்திலிருந்த சங்கிலியினை அறுத்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நிலைதடுமாறி வீழ்ந்ததில் மோட்டார் சைக்கிளினை அவ்விடத்தில் கைவிட்டு தப்பியோடியுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
சங்கிலியின் ஒரு பகுதி மாணவியின் கையிலேயே இருந்ததாகவும் குறித்த மோட்டார் சைக்கிளினையும், அதன் அருகிலிருந்து மெமறிக் கார்ட் மற்றும் தொலைபேசி கவர் ஆகியவற்றினை மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது பற்றித் தெரியவருவதாவது,
குறித்த பல்கலைக்கழக மாணவி, பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் முடிவுற்று தான் தங்கியிருந்த பிரம்படியிலுள்ள வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில பின்னால் வந்த இருவர் சங்கிலியினை அறுத்துக் கொண்டு ஓடியுள்ளனர்.
இதன்போது மாணவி கூக்குரலிடவே அங்கு பொதுமக்கள் வருவதினை அவதானித்த சங்கிலித் திருடர்கள் நிலைதடுமாறி வீழ்ந்ததால் மோட்டார் சைக்கிளினை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இது தொடர்பாக குறித்த மாணவி யாழ்.பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினையடுத்து மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களை மீட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.