இந்த நாட்டில் மொழி, மதம், கலாச்சாரம் போன்றவற்றால் தான் ஒருமைப்பாட்டை நிலைநாட்ட முடியும்’ என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொடிகாமம், வரணிப் பகுதியில் இராணுவத்தின் 52 படைப்பிரிவின் ஏற்பாட்டில் தென்மாராட்சி வலயத்திற்குட்பட்ட 24 பாடசாலைகளைச் சேர்ந்த 1,500 மாணவர்களுக்கான சீருடைகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘இன்றை மாலைப் பொழுது மூன்று விடயங்களில் பெறுமதியான மாலைப் பொழுதாக அமைந்துள்ளது. ஒன்று தென்னிலங்கையில் பிறந்த ஒருவர் வடக்கில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சீருடை வழங்கும் நிகழ்வு நடைபெறுகின்றது.
இரண்டாவது எவரது உதவியும் இன்றி வெளிநாட்டில் தான் உழைத்த பணத்தினை இவ்வாறான விடயத்திற்கு பயன்படுத்தியது. மூன்றாவது தெற்கில் கிடைக்கும் உதவிகள் வடக்கு மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை செய்தது போன்ற விடயங்களில் முக்கியம் பெறுகின்றது’ என்றார்.
‘தென்னிலங்கையில் பல நிகழ்வுகளை நான் பார்த்திருக்கின்றேன். இன்று இங்கு பாடசாலை மாணவியர்களின் நடனம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த நாட்டில் பல மொழிகள் பேசப்படுகின்றன. பல மத வாழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதற்கு மேலான பல்வேறு கலாசார விழுமியங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இவை அத்தனையும் இங்கு அழகானதாகவே இருக்கின்றன. இதனை நாங்கள் சரியாக பயன்படுத்தினால் நாட்டின் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும்’ என்றார்.
‘இங்கு அதிகளவான மாணவர்கள் இருக்கின்றார்கள். அதனால் ஒரு விடயத்ததை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். வடக்கில் ஒருவிதமான கல்வி முறை தெற்கில் ஒருவிதமான கல்வி முறையை அரசாங்கம் செயற்படுத்தவில்லை. இங்குள்ள மாணவர்களும் சிறந்த முறையில் கல்வி கற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும்’ என்றார்.
‘எங்களிடம் இருந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கு கடந்த காலம் ஒரு தடயாக இருந்திருக்கின்றது. இப்போது அத்தடை நீக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் சிறந்த சந்தர்ப்பமாக பயன்படுத்திகொள்ள வேண்டும்’ என்றார்.
அத்துடன், ‘எமது திறமைகளை வெளிப்படுத்தி நாட்டை சிறந்த ஒரு நிலைக்கு கொண்டு செல்லும் சந்தர்ப்பாமாக கருதி நாட்டின் முன்னேற்றத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்றும் அவர் கேட்டுக்கொண்டார்