முள்ளிவாய்க்காலில் சீனாக்காரர் காணியை விற்கின்றார்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள காணியினை சீனக்காரர் ஒருவர் விற்பனை செய்வதற்கு ஆங்கில பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்துள்ளதாக வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதன் தெரிவித்தார்.

வடமாகாண காணி பிரச்சினைகள் தொடர்பிலான விசேட அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டட தொகுதியில் வியாழக்கிழமை இடம்பெற்றது

இதன்போது, கருத்துக்கூறுகையில்,

முல்லைத்தீவு பரந்தன் (ஏ – 35) வீதியில், வட்டுவாகல் பாலத்தின் பிரதான வீதியில் இருந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட கடற்கரையோர பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான 614 ஏக்கர் காணிகள் கடற்படை முகாம் அமைக்கும் பொருட்டு சுவீகரிப்பதற்காக, நிலஅளவை செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மக்களின் எதிர்பார்ப்பால் கைவிடப்பட்டன.

அந்த காணிகள் 50 இற்கும் மேற்பட்டவர்களுக்கு சொந்தமான காணிகள். 50 பேரில் ஒரு சீனாக்காரருக்கு சொந்தமான காணியும், 4 சிங்களவர்களுக்கு சொந்தமான காணியும் இருந்தன.

இந்நிலையில் சீனாக்காரருக்கு சொந்தமான காணியான 49 ஏக்கர் காணியை தலா 35 ஆயிரம் ரூபாய்ப்படி விற்பனை செய்யவிருப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சிங்களவர் ஒருவருக்கு சொந்தமான காணியும் கடற்படையால் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சீனாக்காரருடைய காணியும், சிங்களவருடைய காணியும் திருப்பி கொடுக்க முடியுமானால் ஏன் எங்கள் தமிழ் மக்களின் காணிகளை திரும்ப தரமுடியாது. இது அநியாய செயல் என பிரதி அவைத்தலைவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

முள்ளிவாய்க்காலில் எனக்கும் காணி உண்டு – சீனப் பிரசை ஜுயூ சீ சாங்

Related Posts