மருத்துவர் சிவன்சுதனுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்

Phoneயாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவர் சிவன் சுதனுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

யாழ். போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் மருத்துவர் எஸ்.சிவன் சுதனுக்கு நேற்று முற்பகல் அநாமதேயத் தொலைபேசி இலக்கத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது.

தன்னைப் படைப் புலனாய்வாளரென அறிமுகப்படுத்திய அந்த நபர் பயங்கரவாதப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரின் தொலைபேசியில் மருத்துவரின் தொலைபேசி இலக்கம் பதிவாகியுள்ளதாகவும், இதனால் மருத்துவர் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளிலிருந்து மருத்துவர் விடுவிக்கப்படவேண்டுமாயின் சில அதிகாரத் தரப்பினரை உரிய கவனிப்புக்குட்படுத்த வேண்டுமெனத் தொலைபேசியில் பேசியவர் கூறியுள்ளார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்த மருத்துவர், தான் தவறான வழிகளில் செல்ல விரும்பவில்லை. உரிய விசாரணைகளைச் சந்திக்கத் தயாராக உள்ளதாகக் கூறி அழைப்பைத் துண்டித்துள்ளார்.

பின்னர் இது தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

Related Posts