இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாததால் இரு நாடுகளுக்கு இடையேயும் விரிசல் ஏற்பட்டு விடாது என பிரதி அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியா நீண்ட காலமாக இலங்கையின் நட்பு நாடாக உள்ளது எனவும், விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு தலைமை வகிக்க, இந்தியாவின் கேரளமாநிலம், திருவனந்தபுரத்திற்கு சென்றிருந்த ஜெயசூரிய செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
பொதுநலவாய மாநாட்டிற்கு வராமல் இருந்தது ஒரு நாட்டு தலைவரின் தனிப்பட்ட முடிவு. எனது கணிப்பு சரியாக இருந்தால், முன்னர் பெர்த் நகரில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டடைக் கூட இந்தியப் பிரதமர் புறக்கணித்துள்ளார் என்றார்.
மேலும், 2009-ல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி கட்டப் போரின் போது மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணை செய்ய வேண்டும் என்ற பிரித்தானிய அரசின் கோரிக்கை ஏற்புடையது அல்ல எனவும் சனத் ஜெயசூரிய இதன்போது தெரிவித்தார்.
இலங்கை ஒரு சுதந்திர நாடு. அதற்கு என தனி இறையான்மையும், சட்ட திட்டங்களும் உள்ளன. எனவே போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை தேவையில்லை என்றார்.