போதனா வைத்தியசாலையில் ஊழியர் போன்று கொள்ளையர்; நோயாளர்களே! உங்கள் நகை கவனம் ஆஸ்பத்திரிப் பொலிஸார் எச்சரிக்கை

பெரும்பாலும் வெளிநோயாளர் பிரிவிலேயே இந்தக் கொள்ளை அதிகம் இடம்பெறுகிறது. மருத்துவ விடுதிகளிலும் இவை ஆங்காங்கே இடம்பெறுகின்றன.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறச்செல்பவர்கள் நகைகளை அணிந்து செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகைகளுடன் வைத்தியர்களிடம் சென்றால் அவர்கள் பேசுவார்கள். எனவே அவற்றைக் கழற்றி எம்மிடம் தந்துவிட்டு உள்ளே போய் வாருங்கள் நாம் வைத்தியசாலை ஊழியர்கள். நீங்கள் வைத்தியரிடம் காட்டிவிட்டு வெளியே வந்ததும் உங்கள் நகைகளைத் தருகிறோம் என்று மிகப் பண்பாகப் பேசி ஒரு கூட்டம் நகைக் கொள்ளையில் ஈடுபட்டுவருவதாக வைத்தியசாலைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நோயாளிகள் வைத்தியசாலைக்குச் செல்லும்போது எந்தவித நகைகளையும் அணியாமல் வாருங்கள். மிக அவதானமாக இருங்கள். உங்கள் நகைகளுக்கு நீங்களே பொறுப்பு எனப் பொலிஸார் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது குறித்துப் பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது:
பெரும்பாலும் வெளிநோயாளர் பிரிவிலேயே இந்தக் கொள்ளை அதிகம் இடம்பெறுகிறது. மருத்துவ விடுதிகளிலும் இவை ஆங்காங்கே இடம்பெறுகின்றன. பல்வேறுபட்ட இடங்களிலிருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நோயாளர்கள் கிளினிக் மற்றும் மருத்துவ சேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.
 அவர்களில் அநேகமாக வயதானவர்கள் எவரது உதவிகளுமின்றித் தனியாக வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்கு வருகின்றனர். அதனால் அவர்கள் தாம் கொண்டு செல்லும் பணம், அணிந்து செல்லும் நகைகள் ஆகியவற்றுடன் உள்ளே வைத்தியர்களிடம் செல்ல முடியாது.
அப்படிச் சென்றால் வைத்தியர்கள் பேசுவார்கள் இந்தச் சந்தர்ப்பத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது ஒரு கொள்ளைக் கூட்டம். வைத்தியசாலைக்கு வரும் வயதானவர்களிடம் “நீங்கள் உள்ளே வைத்தியரிடம் காட்டிவிட்டு வாருங்கள். நாங்கள் வைத்தியசாலை ஊழியர்கள் தான். உங்கள் நகைகளைக் கழற்றித் தாருங்கள். நீங்கள் வெளியே வந்ததும் அவற்றை உங்களிடம் ஒப்படைக்கிறோம்’ என்று பண்பாகப் பேசுபவர்களிடம் நோயாளிகளும் தமது நகைகளைக் கழற்றிக் கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். திரும்பி வந்து பார்த்தால் அவர்களை அங்கு காணமுடியாது.
அதன் பின்னர் தான் புரியும் அவர்கள் கொள்ளைக் கும்பல் என்று. இவ்வாறு ஏராளமான முறைப்பாடுகள் எமக்கு வந்த வண்ணமுள்ளன. எனவே வைத்தியசாலைக்கு தங்க நகைகளை அணிந்து வர வேண்டாம். அத்துடன் வயதானவர்களும் யாரையாவது உதவிக்கு அழைத்து வாருங்கள்.
ஏனெனில் உதவி புரிகிறோம் என்று கூறியும் நகைகள், பணம் கொள்ளையிடும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. எனவே வைத்தியசாலைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் இது பற்றிக் கவனம் செலுத்துங்கள் என்று பொலிஸார் கூறினர்.

Related Posts