பொலிஸ் பேச்சாளரின் கருத்துக்கு மனோ கணேசன், சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்!

tellippalai_policeதெல்லிப்பழைச் சம்பவத்தில் யாரையும் பொலிஸார் கைது செய்யவில்லை. கைது செய்யப்பட்டமை போன்று காண்பிக்கும் ஒளிப்படம் புனைவானது. என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருக்கும் கருத்துக்கு தமிழ்த் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தெல்லிப்பழை உண்ணாவிரதப் போராட்டத்தில் குழப்பம் விளைவித்தார்கள் எனக் கூறப்படுபவர்களுள் ஒருவரின் கையை பொலிஸார் பிடித்துக் கொண்டு செல்வதுபோல வெளியாகியுள்ள புகைப்படங்கள் திரிபு படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிசாந்த ஜயக்கொடி தெரிவித்திருந்தார்.

தற்போது வளர்ச்சியடைந்துள்ள அதிநவீன தொழில்நுட்பத்தில் புகைப்படங்கள் பலவாறாக திரிபுபடுத்தப்படுகின்றன. தெல்லிப்பழை சம்பவத்திலும், குறித்த புகைப்படங்கள் பொலிஸாருக்கு எதிராகத் திரிபுபடுத்தப்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள் தமிழ் தலைவர்கள்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன்

பொலிஸ் பேச்சாளர் இவ்வாறு சொன்னால் அவர் அணிந்திருக்கும் பொலிஸ் உடைக்கே யாரும் மரியாதை கொடுக்க மாட்டார்கள். இது வெட்கக்கேடான கருத்து.

பொதுமக்கள் ஆயிரம் பேர் தமது கண் முன்னால் பொலிஸாரிடம் ஒருவரை ஒப்படைக்க, அவர் இராணுவம் என்ற காரணத்துக்காக விடுவித்து விட்டு, பொலிஸ் பேச்சாளர் இப்படிக் கூறுவதை விட தனது பொலிஸ் சீருடையைக் கழற்றி எறிந்துவிட்டு இருக்கலாம்.

மேலும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பேச்சாளர், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எல்லோரும் பொலிஸ் வேலைக்கும், பொலிஸ் உடைக்கும் பொருத்தமில்லாதவர்கள்.

இவர்கள் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கக் கூடியவர்கள் இல்லை. பொலிஸ் சீருடையே இவர்களால் அசிங்கப்படுன்றது என்றார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்

பொலிஸ் பேச்சாளர் இவ்வாறு கூறியமை வெட்டக்கேடான விடயம். ஆயிரக்கணக்கான மக்கள், பொறுப்பு வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், நடந்த சம்பவத்தைப் பொலிஸ் பேச்சாளர் மறுத்திருப்பது கேலிக்கூத்தான விடயம்.

எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்ற முற்படும் போது, சிலர் குழப்பம் விளைவித்ததாகவும் அதனைத் தடுக்கவே அங்கு இராணுவம் வந்ததாகவும், இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். யாராவது குழப்பம் விளைவித்தால் அதனைத் தடுக்க பொலிஸார் தான் செல்ல வேண்டும்.

சகல ஊடகங்களும் பொலிஸார், குழப்பம் விளைவித்த நபரைக் கைது செய்துகொண்டு செல்லும் ஒளிப்படத்தை வெளியிட்டிருந்தன.

இதன் பின்னர் பொலிஸ் பேச்சாளர் இதனைத் தொழில் நுட்பப் புனைவு என்று சொல்வது கேலிக்கூத்தானது என்றார்.

Related Posts