பிரதேச சபைகளிலிருந்து சுகாதாரத் திணைக்களத்திற்கு மீளப்பெறப்பட்ட பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களை உடனடியாக அந்தந்த பிரதேச சபைகளுக்கே விடுவிக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உத்தரவிட்டார்.
நேற்று மாலை 5 மணியளவில் வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலிலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டு சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டது.
இதில் பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டு மேற்குறித்த தீர்மானத்துடன் அதிமுக்கியமான பின்வரும் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன. இன்றிலிருந்து ஆறுமாத காலப்பகுதியினுள் வடமாகாணத்திலுள்ள அனைத்து பிரதேச சபைகளுக்கும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஆளணி மாகாண சபையினால் ஏற்படுத்தித் தரப்படும். இதற்குரிய ஒழுங்குகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டார் முதலமைச்சர்.
அதுவரை பிரதேச சபைகளில் இணைக்கப்பட்ட பொதுச்சுகாதாரப்பரிசோதகர்களுக்கான சம்பளத்தினை சுகாதார அமைச்சு மேற்கொள்ளும் எனவும் ஆளணி உருவாக்கப்பட்டதன் பிற்பாடு உள்ளுராட்சி அமைச்சு சம்பளக் கொடுப்பனவை மேற்கொள்ளும். இவற்றிற்கு உடன்பட்ட தவிசாளர்கள் தமது பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவதாக அறிவித்துள்ளனர். உள்ளுராட்சி மன்றங்கள் சார்பில் தமது கருத்துக்களை தெளிவாகவும் விளக்கமாகவும் ஆதாரபூர்வமாகவும் வெளிப்படுத்தினார் அவைத்தலைவர். இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர் நடைமுறை விடயங்களையும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் சம்பந்தமாகவும் நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் தெளிவாக விளக்கமளித்தார்.
மேற்படி கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் வடமாகாணசபை உறுப்பினர் பா கஜதீபன் வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு , வலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் மேற்கு, நல்லூர், கரைச்சி , வடமராட்சி தெற்கு,மேற்கு, பருத்தித்துறை, சாவகச்சேரி ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.