பேரறிவாளன், சாந்தன், முருகன் விடுதலைக்கு எதிரான மத்திய அரசின் மனு மீது ஜூலை 7-ல் விசாரணை!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை ஜூலை 7-ந் தேதியன்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க உள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

perarivalan-santhan-murugan

தங்களது விதிக்கப்பட்ட தூக்கை ரத்து செய்யக் கோரி ஜனாதிபதியிடம் கருணை மனுவை மூவரும் கொடுத்தனர். ஆனால் 11 ஆண்டுகாலம் கழித்து இவர்களது கருணை மனு நிராகரிக்கப்பட்டது.

இப்படி தாமதமாக கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் தங்களது தூக்கை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 18-ந் தேதி மூவரது தூக்கு தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைத்தது.

அத்துடன் மூவரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் கூறியது.

இதனடிப்படையில் இந்த மூன்று பேருடன் ராஜிவ் வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 4 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானித்தது. ஆனால் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. இதனால் 7 தமிழர் விடுதலைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

மேலும் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சதாசிவம் தாம் ஓய்வு பெறும் நாளான கடந்த ஏப்ரல் 25-ந் தேதியன்று, மத்திய அரசின் மனுவை 5 முதல் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றுவதாக தெரிவித்தார்.

வழக்கின் விசாரணையை 3 மாதத்துக்குள் அரசியல் சாசன பெஞ்ச் முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஜூலை 7-ந் தேதியன்று மூவர் விடுதலைக்கு எதிரான மத்திய அரசின் மனுவை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என்று இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts