பிலாய் எஃகு ஆலையில் விஷவாயுக் கசிவு : ஆறு பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள இந்தியாவின் மிகப் பெரிய எஃகு தொழிற்சாலைகளில் ஒன்றில் வியாழக்கிழமையன்று வெடிப்பு ஒன்றை தொடர்ந்து ஏற்பட்ட விஷவாயுக் கசிவினால் குறைந்தது 6 பேராவது கொல்லப்பட்டுள்ளனர் என்று ஆலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

bhilai_gas_leak

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாய் பகுதியில் இருக்கும் அரசாங்கம் நடத்திவரும் இந்த தொழிற்சாலையில் தண்ணீர்க் குழாய் ஒன்று பழுது பார்க்கப்பட்டுவந்த நேரத்தில் அதன் அருகில் இருந்த ஊதுலையில் ஏற்பட்ட வெடிப்பிலிருந்து நச்சு வாயு வெளிவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தொழிற்சாலையில் இருந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக இருந்திருந்தால் இந்த இறப்புகளை தடுத்திருக்கலாம் என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர். ஆலை நிர்வாகத்தின் சார்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

கிட்டத்தட்ட 30 பேர் காயமடைந்தும் உடல் நலம் குன்றிய நிலையிலும் உள்ளனர்.
வியாழக்கிழமையன்று மாலையும் நேற்று காலையும் தொழிற்சாலையில் உள்ள சில பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வியாழன் இரவு அந்த தொழிற்சாலையின் முக்கிய தண்ணீர் குழாய் திடீரென முறிந்ததை அடுத்து ஊதுலைக்கு தண்ணீர் வழங்கும் குழாய்களில் அழுத்த குறைவு எற்பட்டது என்று அந்த தொழிற்சாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த குழாய் முறிவை சரிசெய்ய பணியாளர்கள் முயற்சித்து கொண்டிருந்த போதே ஊதுலையில் இருந்து வாயு அந்த முறிந்த குழாய்களுக்குள் நுழைந்து வெளியே கசிந்தது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஃகு தண்டவாளங்களை தயாரிக்கும் இந்தியாவின் முதல் மற்றும் முக்கிய தொழிற்சாலையான இதில் பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர்.

Related Posts