பிரதேச செயலர்களின் 6 பேரின் இடமாற்றம் இன்று முதல்

யாழ். மாவட்டத்தின் 6 பிரதேச செயலர்களது இடமாற்றத்தை உடனடியாக இன்று முதல் அமுல்படுத்த வேண்டும் என்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நேற்று மாலை அறிவித்துள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் யாழ். மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்திருந்தது. இதன் பின்னர் கோரப்பட்ட மேன் முறையீட்டுக்காலத்தினை தொடர்ந்து எதுவிதமாற்றமும் இன்றி பிரதேச செயலாளர் களது இடமாற்றம் நடைமுறைப்படுத் தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் யாழ். மாவட்டத்தில் சனத் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவதால் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரையில் மேற்படி இடமாற்றத்தை ஒத்திவைப்பதாக அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அறிவித்திருந்தார்.

இருப்பினும் நேற்று மாலை திடீரெனக் கிடைக்கப்பெற்ற அறிவித்தலினை தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் பிரதேச செயலர்களுக்கான அவசர கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போது முன்னரே தீர்மானிக்கப்பட்ட இடமாற்றத்தின் பிரகாரம் பருத்தித்துறை பிரதேச செயலராகக் கடமையாற்றிய ஆர்.வரதீஸ்வரன், கரவெட்டிப் பிரதேச செயலராகவும், நல்லூர் உதவிப் பிரதேச செயலராக கடமையாற்றிய ஏ.சோதிநாதன் சங்கானைப் பிரதேச செயலராகவும், சங்கானை பிரதேச செயலராக கடமையாற்றிய திருமதி பா.தேவநந்தினி காரைநகர் உதவி அரசாங்க அதிபராகவும், காரைநகர் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றிய ரி.ஜெயசீலன் பருத்தித்துறை பிரதேச செயலராகவும், தெல்லிப்பழை பிரதேச செயலராக கடமையாற்றிய எஸ்.முரளீதரன் சண்டிலிப்பாய் பிரதேச செயலராகவும் இன்று முதல் பணியாற்றவுள்ளனர்.

முன்னரே தீர்மானிக்கப்பட்ட இடமாற்றத்தின் பிரகாரம் தெல்லிப்பழை பிரதேச செயலராக, ஊர்காவற்துறை உதவி அரசாங்க அதிபர் கே.ஸ்ரீமோகனனும், ஊர்காவற்துறை உதவி அரசாங்க அதிபராக, சண்டிலிப்பாய் பிரதேச செயலர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகமும் நியமிக்கப்படுவதாக இருந்தது. இருப்பினும் நேற்று வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு அமைய திருமதி எழிழரசி அன்ரன் யோகநாயகம் தெல்லிப்பழை பிரதேச செயலராக இன்று முதல் பொறுப்பேற்கவுள்ளார்.

Related Posts