யாழ்.மாவட்டத்தில் விவசாயத்திற்கு பாதிப்பான விதத்தில் வளர்ந்துள்ள பாத்தீனியம் செடிகளை அழிக்கும் நடவடிக்கையில் யாழ்.பாதுகாப்புப் படைகள் நேற்று செவ்வாய்க்கிழமை (04) ஈடுபட்டனர்.
யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேராவின் ஆலோசனையின் படி 523 ஆவது பிரிவுத் தளபதி பிரிகேடியர் அதுல மாரசிங்கவின் கண்காணிப்பில் இந்த பாத்தீனிய ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுதொடர்பாக இராணுவத்தினரால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாத்தீனிய அழிப்பு வேலைத்திட்டத்திற்கு அந்தந்த பிரதேச மக்களும் பங்களிப்பு செய்கின்றனர்.
பாத்தீனியச் செடிகளினால் மனிதர்களுக்கு பல நோய்களை ஏற்படுவதுடன், மிருகங்களுக்கும் இவற்றினால் நோய்கள் பரவுகின்றன. அதற்கு மேலாக விவசாய நிலங்களின் வளத்தினையும் இந்த பாத்தீனியச் செடிகள் அழிக்கின்றன.
இந்திய இராணுவத்திற்கு உணவுக்காக கொண்டு வரப்பட்ட செம்மறி ஆடுகளின் மூலம் இந்தச் செடிகள் 1987 ஆம் ஆண்டு இலங்கைக்கு பரவியிருந்தது.
யாழ்.மாவட்டத்திலுள்ள 10 பிரதேச செயலர்கள் பிரிவுகளில் 74,769 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பாத்தீனியச் செடிகள் பரவியுள்ளது’ என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.