பாரம்பரியப் பயிரினங்களுக்கு மீளவும் திரும்பவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது

பூகோளரீதியாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக வடக்கில் இந்த ஆண்டு நிலவிய கடும் வரட்சி இனிவரும் ஆண்டுகளிலும் நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிக நீர்ப்பாசனம் தேவைப்படும் கலப்பினங்களை மாத்திரம் முற்றுமுழுதாக நம்பியிராமல் வரட்சிக்குத் தாக்குப்பிடிக்கக்கூடிய பாரம்பரியப் பயிரினங்களுக்கு நாம் மீளவும் திரும்பவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று வடமாகாண விவசாய, கமனநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

5

அழிந்துவரும் பாரம்பரியப் பயிரினங்களைப் பாதுகாக்கவென வடக்கு விவசாய அமைச்சால் ‘வீரியம்’ திட்டம்’ முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை (23.10.2014) முழங்காவில் ஜெயபுரம் வடக்கு பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டு விவசாயிகளுக்குப் பாரம்பரியப் பயிரினங்களின் விதைகளை வழங்கிவைத்து உரையாற்றும்போது அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,

சுதேசிய இனங்களான பாரம்பரியப் பயிர்கள் அதிக நீரோ, அதிகளவு இரசாயன உரங்களோ தேவைப்படாதவை. பீடைகளின் தாக்கத்துக்கு எளிதில் ஆளாகாதவை. ஆனால், கலப்பினங்களின் வரவோடு பாரம்பரியப் பயிரினங்கள் யாவும் வழக்கொழிந்து போய்விட்டன. மேலும் அதிகளவு இரசாயன உரங்களும், பூச்சிகொல்லி மருந்துகளும் கலப்பினங்களை விளைவிக்கப் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் மோசமாகப் பாதிக்கப்படுவதோடு, உணவில் கலக்கும் இரசாயனங்களின் மூலம் நோய்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதனால், கலப்பு இனப் பயிர்களுக்குப் பதிலாகச் செயற்கை இரசாயனங்களைப் பயன்படுத்தாத இயற்கை வேளாண்மையை உலகநாடுகள் ஊக்குவிக்க ஆரம்பித்துள்ளன.

இயற்கை அல்லது சூழலியல் விவசாயத்துக்குக் கலப்பினப் பயிர்களைவிட பாரம்பரியப் பயிரினங்களே மிகவும் பொருத்தமானவை. இதனால் வழக்கொழிந்து அழிந்து போய்க்கொண்டிருக்கும் பாரம்பரிய இனங்களை மீட்டெடுத்து மீளவும் பயிரிடவேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனாலேயே, நோய்நொடிக்கு ஆளாகாமல் எமது மண்ணில் வீரியத்துடன் வளரக்கூடிய பாரம்பரியப் பயிரினங்களைப் பாதுகாக்கும் ‘வீரியம்’ என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

வீரியம் திட்டத்தில் நாம் விவசாயிகளுக்கு இலவசமாகப் பாரம்பரியப் பயிர்களின் விதைகளை வழங்கினால், அறுவடையின் பின்னர் விவசாயிகள் எமக்கு இரட்டிப்பு மடங்கு விதைகளைத் தரவேண்டும். இந்த விதைகளை நாம் வேறு விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம் விரைவிலேயே பாரம்பரிய இனங்களை மீட்டெடுத்துப் பெருமளவில் பெருக்கமுடியும் என்றும் தெரிவித்தார்.

10

இந்நிகழ்ச்சியில் அணில்வரியன், மொட்டைக்கறுப்பன், பச்சைப்பெருமாள், கறுப்புச்சீனட்டி, சுவந்தல், றோனால்பட்டம், படபொலஸ் போன்ற சுதேசிய நெல்இனங்களும் உபஉணவுப் பயிர்ச்செய்கைக்கான பாரம்பரிய விதைகளும் வழங்கிவைக்கப்பட்டன.

மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, அமைச்சின் செயலாளர் யு.எல்.எம் ஹால்தீன், பிரதிவிவசாயப் பணிப்பாளர்கள் அ.செல்வராசா, தெ.யோகேஸ்வரன், சகீலாபானு அசரக், பொ.அற்புதச்சந்திரன், உதவி விவசாயப் பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீரங்கன், விதை அபிவிருத்தி நிலையத்தின் பிரதிப்பணிப்பணிப்பாளர் எஸ்.சதீஸ்வரன், விதை அத்தாட்சிப்படுத்தும் அலுவலர் என்.செல்வகுமார், விவசாய ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஜே.அரசகேசரி, கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் செ.கௌரிதிலகன் ஆகியோருடன் பெருமளவு விவசாயிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

பொதுமக்களில் தேர்வுசெய்யப்பட்ட பயனாளிகள் நூறுபேருக்குத் தரமுயர்த்தப்பட்ட கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படங்களை பார்வையிடுவதற்கு..

Related Posts