பணத்துடன் காணாமல் போயுள்ள மனைவியைத் தேடும் கணவர்! வடமராட்சியில் சம்பவம்

missing personவடமராட்சி பிரதேசத்தின் அல்வாய் மேற்கு, திக்கத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் 35 பவுண் தங்க நகைகள் மற்றும் 15 லட்சம் ரூபா பணத்துடன் காணாமற் போயுள்ளதாக வியாழக்கிழமை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மனைவி காணாமல் போனதையறிந்து கனடாவிலிருந்து வருகை தந்த கணவனே இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

நான்கு வயதுப் பிள்ளையின் தாயாரான க.வசந்தகுமாரி (வயது29) என்பவரே கடந்த வாரம் காணாமற்போயுள்ளார்.

இவரிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பணம் கேட்டு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையிலேயே இவர் காணாமற்போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

அல்வாய் மேற்கு திக்கத்தைச் சேர்ந்த இந்தப் பெண்ணின் கணவர் தொழில் நிமித்தம் கனடாவிற்குச் சென்றிருந்தார்.

இவரின் மனைவியும் நான்கு வயது பிள்ளையும் திக்கத்தில் வசித்து வந்தனர். அண்மையிலேயே இவர்கள் புதிய வீடொன்றைக் கட்டி புதுமனைப் புகுவிழாவையும் நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில் கனடாவிலுள்ள இவரின் கணவரிடம் பணம் கேட்டு தொலைபேசி மூலமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட அதேவேளை, பணம் தராவிட்டால் வீண் விபரீதங்கள் ஏற்படுமென்று அச்சுறுத்தியதுடன், திக்கத்திலிருந்த மனைவிக்கும் இதேபோல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த அச்சுறுத்தல்களின் பின்னணியில் தேவரையாளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts