நாம் தோற்றுப் போனதொரு சமூகம் அல்ல.- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு சபையை கைப்பற்றுவேன் இவ்வாறு சூளுரைத்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அத்துடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் முன்வர வேண்டும் எனவும் அவர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். ஊடகவியலாளர்களை அமைச்சர் டக்ளஸ் நேற்று கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு நாம் தோற்றுப் போனதொரு சமூகம் அல்ல.

எம்மிடையே அவ்வப்போது பலம் பெற்றிருந்த சக தமிழ்த் தலைமைகளின் மதிநுட்பம் மறந்த நடைமுறைக்கு ஒவ்வாத வழிமுறைகளே தோற்றுப்போயுள்ளன. எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு சகல தமிழ்க் கட்சிகளும் கடந்தகால தவறுகளை திருத்திக்கொண்டு செயற்பட முன்வரவேண்டும் என்பதே எனது விருப்பம். இதில் ஈ.பி.டி.பியினராகிய நாம் தவறுவிட்டிருந்தாலும், அதை நியாயபூர்வமாக யாரும் சுட்டிக்காட்டினால் அதை ஏற்று திருந்தி நடக்கவும் தயாராக இருக்கின்றோம்.

கிடைத்த சந்தர்ப்பங்கள் யாவற்றையும் நாமே தவறவிட்டோம். சிங்களம் எமக்கு ஒருபோதும் தீர்வு வழங்காது என்று ஏட்டிக்குப் போட்டியான இனவாத சிந்தனைகளும், தீர்வை அடைவதற்கான எந்தவொரு நடைமுறை சார்ந்த வழிமுறையையும் கொண்டிருக்காமல், உரிமை குறித்த வெற்றுக்கோஷங்களை மட்டும் எழுப்புவதால் எந்தப் பயனும் இல்லை. அதற்காக எவரும் யாரிடமும் சரணாகதியடைய வேண்டும் என்று அர்த்தமல்ல. அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசி வருவதை நாம் வரவேற்கின்றோம்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஆலோசனைகளையும் பெற்று, 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதற்கு மேலதிக அதிகாரங்களை வழங்கி, மேலும் அதை வளர்த்தெடுப்பதற்கான அரசியல் தீர்வு முயற்சி இப்போது தொடங்கியுள்ளது. இது யுத்தத்திற்குப் பிந்திய புதியதொரு முயற்சி. குறிப்பிட்ட கால எல்லையை நிர்ணயித்தே இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு செயற்படவுள்ளது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் பலவும் தத்தமது பிரதேசங்களில், மாகாணசபைகளில் பங்கெடுத்து வருகின்றன. ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் என சகல தரப்பும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கெடுக்கின்றன.

ஆகவே, இந்த ஆலோசனைகளின் மூலம் கிடைக்கும் அரசியல் தீர்வானது பலமானதாக அமையும். எனவே, கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பம் அரியதொரு வாய்ப்பாகும். ஆகவே, சகல தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபட்டு, ஒருவருக்கொருவர் அர்த்தமின்றி முரண்படாமல், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கெடுப்பதன் மூலம் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்த விடயங்களை ஒரே குரலில் வலியுறுத்தி கூறவேண்டிய தருணம் இது.

நாடாளுமன்றில் அங்கம் வகிக்காத ஏனைய தமிழ்க் கட்சிகளும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக தமது யோசனைகளைத் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தையும் நாமே உருவாக்கிக் கொடுப்போம். எனவே, நம்பிக்கையுடனும், அக்கறையுடனும், உண்மைத்தன்மையுடனும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ்க் கட்சிகளும் முன்வரவேண்டும் என்றார்.

Related Posts