நாங்கள் நல்லது செய்வதைப் பொறுக்காத சிலர் வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்புகின்றனர்!

முதலமைச்சரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள வாராந்த கேள்வி பதில் பகுதி…

மணலாற்றுக் காணி அபகரிப்புச் சம்பந்தமான இரண்டாம் கட்டுரை தாமதமாகின்றது. அதற்குப் பதிலாகப் பின்வரும் கேள்வியும் பதிலும் தரப்பட்டுள்ளன. இதுவே எனது முதலமைச்சர் காலத்தில் வழங்கப்படும் கடைசி பதிலாகும். தொடர்ந்து நான் இவ்வாறான கேள்விகளுக்குப் பதில் தர வேண்டும் என்று வாசகர்களும் பத்திரிகைகளும் கேட்டால் அவ்வாறு எழுத சித்தமாயுள்ளேன்.

கேள்வி – தங்களுடைய காலத்தில் பளையில் அமைக்கப்பட்ட காற்றாலை மூலமான மின்சார பிறப்பாக்கி பொறிகளை நிறுவுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட போது உரிய நடைமுறைகள் பின்பற்றபடவில்லை என்றும் வடமாகாணசபைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் இழக்கப்பட்டதாகவும் மாகாண சபையில் கூறப்பட்டது. அது தொடர்பாக நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள்?

பதில் – வடக்கு மாகாணத்திற்கு வருடாந்தம் 20 மில்லியன் ரூபா வருமானத்தைப் பெற்றுத் தருகின்ற இந்த நல்ல திட்டத்தில் நான் அறிந்த வரையில் எவ்வித மோசடிகளும் முறைகேடுகளும் இடம்பெறவில்லை. நாங்கள் நல்லது செய்வதைப் பொறுக்காத சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டுக் கணக்காய்வு அலுவர்களுக்குத் தவறான தகவல்களை வழங்கியதன் காரணமாக அவர்களால் பல்வேறுபட்ட கேள்விகளும் தவறான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. இந்தக் காற்றாலை தொடர்பாக என்னால் வடமாகாண பிரதி கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு உரிய ஆவணங்களுடன் அண்மையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காற்று மின்னாலை நிறுவனங்களுடன் வடக்கு மாகாண சபையின் சார்பில் ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் பிரதம செயலாளருக்கு பதிலாக வடமாகாணசபையின் பேரவை செயலாளரினால் கையொப்பமிடப்பட்டிருந்தது. தொடர்புபட்ட சட்டத்தில் பேரவை செயலாளர் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரவை செயலாளரினால் ஒப்பமிட்டது தவறானதென்றும், பிரதம செயலாளரே அதில் ஒப்பமிட வேண்டுமென்றும் ஆளுநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டதால் அந்த ஒப்பந்தம் மீளப்பெறப்பட்டு செல்லுபடியற்றதாக்கப்பட்டுப் புதிய ஒப்பந்தம் 07.11.2014ல் செய்து கொள்ளப்பட்டது. அதன் வழங்கு காலம் பின்னோக்கிய நாளில் இருந்தே நடைமுறைக்கு வந்தது. வடமாகாணத்தின் பிரதம செயலாளரினால் ஒப்பமிடப்பட்ட இந்த ஒப்பந்தமே நடைமுறையிலுள்ள ஒப்பந்தமாகும்.

குறித்த நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது வாடகை ஒப்பந்தமோ அல்லது குத்தகை ஒப்பந்தமோ அல்ல. அதற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லை. குறித்த நிறுவனம் ஈட்டும் வருமானத்திற்கும் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தத்திற்கும் சட்ட தொடர்பாடல்கள் எதுவுமில்லை. செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது இந் நிறுவனங்களிடமிருந்து அவர்களின் சுயவிருப்பின் அடிப்படையில் வணிக நிறுவனங்களுக்கான சமூக கடப்பாடாக நன்கொடையை பெறுவதற்கான ஒரு ஒப்பந்தமாகும். (CSR- Corporate Social Responsibility). இந்த விடயத்தில் அந்த நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் நன்கொடையானது அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில் பேரம் பேசி கட்டாயப்படுத்தி வசூலிக்க முடியாதென்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். வன்முறைக்கும் வன்சிந்தனைக்குமே பழக்கப்பட்ட சிலரே ஏன் கட்டாயப்படுத்தி கூடிய தொகை பெறவில்லை என்று கேட்கின்றார்கள்?

மேலும் 2014 முதல் 2016ம் ஆண்டுகளுக்கடையில் 25 மில்லியன் ரூபா மட்டுமே பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டமை தவறானதாகும். ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒவ்வொரு ஆண்டிற்கும் 20 மில்லியன் ரூபா பொருட்களாகவோ, பணமாகவோ வழங்கப்படலாம். அந்த வகையில் குறித்த ஆண்டுகளுக்கான வருமானம் 20 மில்லியன் ரூபா வீதம் வடமாகாண சபையினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

காணிக் குத்தகையானது காணி ஆணையாளருடன் தொடர்புடைய விடயமாகும். அரசாங்க சட்ட திட்டங்களுக்கு அமைவாக குறித்த காணிக்குரிய குத்தகையானது மாகாண காணி ஆணையாளரினால் வருடாந்தம் அறவிடப்படுகின்றது. குறித்த அரச காணியினை இந் நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதற்கு பளை பிரதேச செயலாளரினால் 12.08.2013இல் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாகாணக் காணி அமைச்சர் என்ற வகையில் 19.03.2014ல் என்னால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடயத்தில் வடமாகாண அமைச்சர் சபையிடமிருந்து அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என்பதுந் தவறானதாகும். 30.09.2014ல் அமைச்சர் சபையின் அனுமதி பெறப்பட்டு பிரதம செயலாளரினால் குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட்டது.

ஒப்பந்த பத்திரத்தின் சரத்து 4(a)ன் பிரகாரம் மாகாண அமைச்சரின் அங்கீகாரமும் கௌரவ ஆளுநரின் அங்கீகாரமும் போதுமானதாகும். மேலும் இந்த நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தொகையானது மாகாண சபையின் வரவு செலவு திட்டத்தில் 2014ம் ஆண்டில் இருந்து உள்ளடக்கப்படவில்லையென்பது தவறான கருத்தாகும்.

2014ம் ஆண்டில் நீர்த்;தாங்கிகள் பொருத்தப்பட்ட 6 பாரவூர்திகள் காற்றாலை நிறுவனங்களினால் வழங்கப்பட்டமையால் வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. அதன் பின்னர் எல்லா ஆண்டுகளிலும் வருடாந்த வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த நன்கொடையில் இருந்து அலுவர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்குவிப்புக் கொடுப்பனவு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டே வழங்கப்பட்டுள்ளது. அடுத்து இந்த திட்டத்தினை செயல்படுத்துவதனால் ஏற்படும் சூழல் பாதிப்பு சம்பந்தமாக மத்திய சுற்றாடல் அதிகார சபையிடமிருந்து அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

மேலே கூறப்பட்ட விளக்கங்கள் மாகாண சபையின் பல அமர்வுகளில் என்னாலும் முன்னாள் கௌரவ விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களினாலும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. மேலதிகமாக 10.09.2018 அன்று இடம்பெற்ற பொது கணக்கு குழுவின் அமர்வின் போதும் பிரதம செயலாளரினாலும் விவசாய அமைச்சின் செயலாளரினாலும் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. எனினும் கௌரவ அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் அவர்களின் தலைமையில் கௌரவ சி.தவராஐா, கௌரவ த.குருகுலராஜா, கௌரவ ச.சுகிர்தன் கௌரவ ப.அரியரட்ணம், கௌரவ இ.இந்திரராஐh ஆகியோர்களை உறுப்பினர்களாக கொண்ட மாகாணப் பொது கணக்கு குழு இந்த விளக்கங்களை செவிமடுக்க விரும்பவில்லை.

இந்த விளக்கங்களுக்கு மாறாக 10.09.2018 திகதி இடம்பெற்ற மாகாண பொது கணக்கு குழு அமர்வின் அவதானிப்புக்கள் தொடர்பாக கௌரவ அமைச்சர் சீ.வி.கே சிவஞானம் அவர்களால் தவறான விடயங்களை உள்ளடக்கி தவறாக வழிநடத்தக்கூடிய விதத்தில் பிரதி கணக்காய்வாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே வட மாகாண பிரதி கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு உரிய விளக்கங்களை ஆவணங்களுடன் நான் அனுப்பி வைத்துள்ளேன். வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் தொடர்பாக தவறான கருத்துகளை மக்கள் வைத்திருக்ககூடாதென்பதற்காகவே மேற்கூறப்பட்டவாறு ஊடகங்கள் வாயிலாகவும் இவற்றைத் தெளிவுபடுத்தியுள்ளேன்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்,
முதலமைச்சர்,
வடமாகாணம்.

Related Posts