யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு அதன் முன்னேற்பாட்டு கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலானது மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குனராசா தலைமையில், யாழ் மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கோவிலின் உற்சவகாலத்தையொட்டி முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதில் போக்குவரத்து, கோவிலின் சுற்றுச்சூழலின் சுத்தம் சுகாதாரம், உணவு மற்றும் அழகுசாதன பொருட்கள் மற்றும் கச்சான் வியாபாரம் உள்ளிட்ட கடைத்தொகுதிகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதேவேளை ஊடக நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு மற்றும் ஊடகவியலாளர்கள் கோவிலுக்குள் உட்செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் வெளி வீதியில் நின்று தமது கடமைகளை மேற்கொள்ளலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களின் போக்குவரத்தை கருத்திற் கொண்டு இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேரூந்துகளின் தேவைகளை நேர நீடிப்பு செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் இறுதி நேரத்தில் கூட்டத்திற்கு சமுகமளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சத்திரச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை சமிச்சை விழக்குகள் பொருத்துவதற்காக வேறொரு இடத்திற்கு இடமாற்றுவது தொடர்பாக தெரிவித்ததுடன் திருவள்ளுவர் சிலையை எங்கு வைப்பது பொருத்தமானது என மக்களின் அபிப்பிராயத்தை கேட்டுக்கொண்டார்.
இதன்போது மாநகர சபையின் தீர்மாணத்துக்கேற்ப பொருத்தமான இடம் ஒன்றில் சிலையை வைப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் தேர் உற்சவ தினத்தன்று உலங்கு வானூர்தியிலிருந்து மலர்கள் சொரிவது தொடர்பாக அபிப்பிராயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களிடம் கோரியிருந்தார்.
உலங்கு வானூர்தியிலிருந்து மலர்கள் தூவுவது ஆகம விதிகளில் தெரிவிக்கப்படவில்லை என்றும் மக்கள் நிலத்தில் நின்று நின்மதியாக இறைவனை வணங்கினாலே போதும் என்று கலாநிதி ஆறுதிருமுருகன் கருத்துத் தெரிவித்தார்.
நேற்றைய இக்கலந்துரையாடலில் ஆணையாளர் எஸ்.பிரணவநாதன், நல்லை ஆதீன குருமுதல்வர் சிறிலசிறி சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ் சின்மயா மிசன் சுவாமிகள் யாக்கிரத் சைத்தான்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த உற்சவம் ஒகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகி 4 ஆம் திகதி தேர்உற்சவமும், 5 ஆம் திகதி தீர்த்தோற்சவமும், 6 ஆம் பூங்காவனத் திருவிழாவுடன் திருவிழா நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி