நல்லூர் ஆலயத்தில் காவலரன் அமைக்க ஆலய நிர்வாகிகளே கேட்டனராம்!

நல்லூர் ஆலயச் சுற்றாடலில் படையினரால் காவலரண் அமைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை ஊடகங்கள், இராணுவத்தின் மீது சுமத்தி வரும் நிலையில் இந்த பிரச்சினைக்கு அடிப்படையான காரணகர்த்த நல்லூர் ஆலய நிர்வாகிகளே என இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இவர்கள் படையினரை சந்தித்து தமது ஆலயத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதோடு, படையினர் காவலரண் அமைக்க உதவிகள் செய்தும் கொடுத்திருக்கின்றனர்.

இது தொடர்பில் இந்த இணையம் மேலும் செய்தி வெளியிடுகையில் இந்தவிடயம் வெளிச்சத்திற்கு வந்தததையடுத்து சம்பவம் தொடர்பில் ஊடகங்கள் விசாரணைக்குச் சென்றிருந்தபோதே இந்தப் பிரச்சினைக்குப் பின்னால் நல்லூர் ஆலய நிர்வாகிகள், முதலாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது.மேலும் தம்மீது மக்களின் எதிர்ப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் அந்தவிடயத்தை மூடி மறைத்ததுடன், சம்பவம் தொடர்பில் எந்தக்கருத்தையும் வெளியிட மறுத்திருக்கின்றனர்.

யாழில் சிவில் நிர்வாகம் உருவாக்கப்படுவதற்கு இராணுவம் தடையாக இருப்பதாக பலர் கூறினாலும், அதற்குத் தூண்டுதலாக இருப்பவர்கள் எம்மவர்கள் என்பதே இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கும் உண்மை என தெரிவிக்கப்படுகிறது.யாழில் பொலிஸாரின் நடவடிக்கை உள்ளபோதும் பொலிஸாரை பாதுகாப்புக்கு கோராமல், படையினரை இவர்கள் கோரியிருப்பது மக்கள் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது.

நல்லூர்க் கந்தன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காவலரணை அகற்றுவதற்கு படைதரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை யாழ் மாநகர சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் யாழ் பாதுகாப்பு கடைகளின் தளபதியுடன் கலந்துரையாடப்பட்டதையடுத்து இரண்டு நாட்களுக்குள் நல்லூர் ஆலயச் சூழலில் உள்ள காவலரண் அகற்றப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாக யாழ். மாநகரசபை முதல்வர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நல்லூரில் இருந்த திலீபனின் நினைவுச்சின்னத்தினை அகற்றுவதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இப்பகுதியில் இருந்த புதிய திருமண மண்டபத்தின் நிர்வாகிகளே தொழிற்பட்டுள்ளனர் என்று தகவல்கள் கசிந்துள்ளன. இந்த மண்டபத்திற்கு செல்லும் பாதையின் குறுக்கே மேற்படி நினைவுச்சின்னம் இருந்தமையினால் தமக்கிருந்த செல்வாக்கினை பயன்படுத்தி அதனை அகற்ற துணைபோனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆலய நிர்வாகிகள் இந்த மண்டபத்திற்கான பாதையினை தமது ஆலய வீதி ஊடாக தடைசெய்திருந்ததன் விளைவாக மண்டபத்தினர் இந்த மாற்று உத்தியினை கையாண்டிருந்தனர்.இம்மண்டபத்தில் அரச நிகழ்வுகளுக்கு இலவசமாக மண்டபவசதி வழங்கப்படுவதாகவும் மற்றொரு செய்தி தெரிவிக்கின்றது.

பொதுவாக நம்மிடையே உள்ள தனிநபர்களின் நடவடிக்கைளினால் சுயநலமாக எடுக்கப்படும் செயற்பாடுகளில் குற்றத்தினை அரசதரப்பில் போடுவதில் நாம் கவனத்தினை செலுத்திவருகின்றோமே தவிர நம்மிடையே உள்ளவர்களை கண்டிக்கவும் குறைகாணவும் தவறிவிடுகின்றோம் என தமிழ்த்தேசிய ஆர்வலர் ஒருவர் கருத்து தெரிவித்தார்

Related Posts