தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத்தலைவருமான சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நேற்றயதினம் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் மேற்படி கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது தென்மராட்சிப்பகுதியில் முக்கியமான இடங்களில் பாதசாரி கடவைகள் விரைவில் இடப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அத்துடன் சாவகச்சேரி நகரசபையினால் விவசாயத்திணைக்களத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக விவசாய சம்மேளனங்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்களுக்கு மருந்து வழங்கப்படாமல் தனியார் வைத்திய நிலையங்களின் பெயரினைக்குறிப்பிட்டு அங்கு செல்லுமாறு பரிந்துரை செய்வதாக மக்கள் விசனம் தெரிவத்ததுடன் மேற்படி வைத்தியசாலைக்கு வசதிகள் இருந்தும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வதாக தெரிவித்தனர்.
மேலும் பருத்தித்துறை சாவகச்சேரி வழிப்போக்குவரத்தில் ஈடுபட்டுவந்த இ.போ.ச சேவை தடைப்பட்டுள்ளதாகவும் அதனை மீள ஆரம்பிக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து குறித்த சேவையினை விரைவில் ஆரம்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் பணித்திருந்தார்.
அத்துடன் தென்மராட்சிப்பகுதில் களவு மற்றும் சட்டவிரோத செயல்கள், கல்வி கற்கும் மாணவிகளை வீதியோரங்களில் நின்று பகிடிவதை பண்ணுதல் போன்றவை அதிகரித்துள்ளதாகவும் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸ் சேவையினை விஸ்தரிப்பதுடன் நடமாடும் பொலிஸ் சேவையினூடாக சட்ட ஒழுங்குகளை பாதுகாக்குமாறு பாராளுமன்ற உறுப்பினரால் பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டது.
தொடர்ந்து தென்மராட்சி வளங்களாக காணப்படும் பழவகைகளினை சிறந்த முறையில் பாதுகாத்து அவற்றை உற்பத்தி செய்வோரை ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் இவ்வாறான உற்பத்தியாளர்களின் பழங்கள் மீசாலையிலுள்ள பழமுதிர்சோலையினால் கொள்வனவு செய்யப்பட்டு ஏற்றுமதி செய்வதற்குரிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கமநலசேவைகள் திணைக்களத்தினரால் தெரிவிக்கப்பட்டதுடன் இப்பிரதேச விவசாய நடவடிக்கைகளினை இடையூறு விளைவித்து வந்த குரங்குகளினை பிடித்து வில்பத்து சரணாலயத்தில் விடுவதற்குரிய நடவடிக்கைகளினை மேற்கொள்ளப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலில் சாவகச்சேரி பிரதேச செயலர், திட்டமிடல் பணிப்பாளர், துறைசார் அதிகாரிகள், கிராமசேவையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.