தீர்வுத் திட்டம் தயாரிக்க சட்டவாளர்களின் மூவர் குழு; 2 வாரத்தில் வரைவு தயாரிக்கப்படும்.மன்னார் கூட்டத்தில் முடிவு!

தமிழர்களுக்கான ஆகக் குறைந்த தீர்வுத் திட்ட வரைவு ஒன்றைத் தயாரிப்பதற்காக மூவர் கொண்ட குழு நேற்று நியமிக்கப்பட்டுள்ளது. மன்னார் ஆயர் இல்லத்தில் நேற்று இடம் பெற்ற தமிழ் அரசியல் கட்சிகளுடனான சந்திப்பின் போதே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிப் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று மன்னார் ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை தலைமையில் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது.

முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமான இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. முற்பகல் 11.30 மணி வரை நீடித்த இந்தக் கலந்துரையாடலில் எந்தத் தீர்மான முடிவும் எட்டப்படவில்லை.இதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய பேரவை ஒன்றை அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது. அத்துடன் தமிழர் பிரச்சினைக்குச் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுத் திட்டம் தேவை என்று தமிழ்த் தேசிய மக்கன் முன்னணியினர் அங்கு தெரிவித்தனர்.
கலந்துரையாடலில் பங்குபற்றிய பெரும்பாலானோர் அதை ஆதரித்தனர். இதன் பின்னர் தமிழ் மக்களின் ஆகக் குறைந்த தீர்வுத் திட்ட வரைவை இரண்டு வாரங்களில் தயாரிப்பது என்றும், இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சட்டத்துறை விரிவுரையாளர் குமார வடிவேல் குருபரன் ஆகியோரை நியமிப்பது என்றும் அங்கு முடிவாகியது.
அத்துடன் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி வவுனியாவில் மீண்டும் கலந்துரையாடலுக்காகக் கூடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமுகப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Posts