“திருகோணமலை துறைமுகத்தை கைப்பற்றும் நோக்கமே வெளிநாட்டு படைகளுக்கு இருந்தது.-மகிந்த

நாட்டின் 65ஆவது சுதந்திர தினத்தின் தேசிய வைபவம் திருகோணமலையில் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. அங்கு தேசியக்கொடியை ஏற்றிவைத்து படைகளின் தளபதிகளுக்கு முன்பாக நின்று நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாறுகையில்,

“திருகோணமலை துறைமுகத்தை கைப்பற்றும் நோக்கமே வெளிநாட்டு படைகளுக்கு இருந்தது. நாடு 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த போதிலும் திருகோணமலையில் பிரித்தானிய படையினர் முகாம்களை அமைத்து தங்கியிருந்தனர்.அவர்களின் முகாம்கள் 1956ஆம் ஆண்டே அங்கிருந்து அகற்றப்பட்டன.

இந்த பகுதியில் புத்தர்சிலை சுற்றி முட்கம்பிகள் அடிக்கப்பட்டிருந்தன. புத்தப்பெருமானுக்கும் சுதந்திரம் இல்லாத நிலைமை ஏற்பட்டிருந்தது. அந்த நிலைமைக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக வாழக்கூடியவகையில் பயங்கரவாதிகளிடமிருந்து நாடு மீட்கப்பட்டது.

சுதந்திரத்திற்கு மட்டுமல்லாது இறைமை, ஒருமைப்பாட்டிற்காக பல சவால்களுக்கு முகம்கொண்டுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இலங்கைக்கு எதிராக வெளிநாடுகளில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவர்களுக்கு பதிலளிக்க வேண்டுமாயின் நாட்டில் அபிவிருத்தி முன்னெடுக்கப்படல் வேண்டும். நல்லிணக்கம் இருத்தல் வேண்டும்.

1948ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை கிடைத்தது. ஐக்கிய நாடுகளில் அங்கம் வகிக்கின்ற எந்தவொரு நாடும் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பிரகடனத்திற்கு நாம் கௌரவமளிக்கின்றோம்.

நாட்டில் இன, மத பேதங்கள் இருக்கமுடியாது. பயங்கரவாதிகள் தலைத்தூக்குவதற்கும் இடமில்லை. நாட்டில் சகலருக்கும் சமவுரிமை வழங்கப்பட்டுள்ளது. இன,மத வேறுபாடுகள் நாட்டில் அழிவையே உருவாக்கும். பேதங்கள் உருவாகினால் அது நாட்டின் அழிவுக்கே இட்டுச்செல்லும். பெற்றுக்கொள்ளப்பட்ட சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான கடப்பாடு அரசாங்கத்திற்கு மட்டுமல்ல எதிரணிக்கும் இருக்கின்றது” என்றார்.

Related Posts