தாய்,சேய், குழந்தை மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக பொதுநல வழக்கு தாக்கல்: திடீர் மரண விசாரணை அதிகாரி எம் உதயசிறி

யாழில் அதிகரித்துவரும் தாய் சேய் குழந்தை மரணம் தொடர்பான விசாரணைகள் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ள படாத நிலையில் யாழ். நீதிமன்றில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.உதயசிறி தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் தாய் சேய் குழந்தை மரணங்கள் தொடர்பிலான 13 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் பல மரணங்கள் தவிர்த்திருக்க கூடியவையே என அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

‘இவ்விடயங்கள் குறித்து உரிய அமைச்சுக்களோ, வைத்தியசாலை நிர்வாகத்தினரோ உரிய காரணங்களை கண்டறியவில்லை. இறப்பு வீதத்தினை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

இவ்வாறான தாய், சேய் குழந்தைகள் மரணங்கள் சமூகத்தில் பெருமளவு தாக்கத்தினை ஏற்படுத்தும்.

ஏனெனில், தாய் சேய், குழந்தைகள் சமூகத்தில் மனித வள உற்பத்தி மையமாக கருதப்படுகின்றன. இம்மரணங்கள் அதிகரித்து சென்றால், எதிர்காலத்தில் தமிழ் சமூகத்தின் அடர்த்தி குறைவடைந்துச் செல்லும்.

இதன் காரணமாக எமக்கு கிடைக்கும், அரசியல், சமூக பொருளாதார உரிமைகள், மறுக்கப்படும். இதன் காரணமாக எதிர்காலத்தில் தமிழ் சமூகத்தின் அடர்த்தி மேலும் குறைவடைந்து செல்கின்றது என்பது தவிர்க்க முடியாதாகும்.

எனவே, இவ்விடயத்தில், அரசியல் தலைமைகளும் புத்திஜீவிகளும் தொண்டு நிறுவனங்களும் உரிய கவனம் செலுத்தி தாய், சேய் குழந்தைகளின் மரணங்களை தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

எதிர்கால சமூகத்தின் நலனிற்காகவே இப்பொதுநல வழக்கை தாக்கல் செய்யவுள்ளேன்’ என அவர் மேலும் கூறினார்.

Related Posts