தற்போது இராணுவத்தில் உள்ளவர்கள் சிற்றுண்டிச்சாலை நடத்துவதற்கும் ஹோட்டல் நடத்துவதற்குமே தகுதியானவர்கள்

Sarath-ponsekaதற்போது இராணுவத்தில் உள்ளவர்கள் இராணுவத்திற்கு தகுதியானவர்கள் இல்லை. சிற்றுண்டிச்சாலை நடத்துவதற்கும் ஹோட்டல் நடத்துவதற்குமே தகுதியானவர்கள் என முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று மதியம் 11.30 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்காத பிரதேசத்தில் இராணுவத்தினரால் ஹோட்டல் நடத்தப்படுவதாக தெரிவித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சரத் பொன்சேகா தனக்கு இராணுவத்தினரால் நடாத்தப்படும் ஹோட்டல் பற்றி எதுவும் தெரியாது என தெரிவித்தார்.

மேலும் தான் இராணுவ தளபதியாக இருந்த போது இராணுவத்தினரால் நடாத்தப்படுகின்ற சிற்றுண்டிசாலைகளை விரும்பவில்லை எனவும் தற்போது இராணுவத்தில் உள்ளவர்கள் இராணுவத்திற்கு தகுதியானவர்கள் இல்லை எனவும் இவ்வாறு சிற்றுண்டிச்சாலை நடத்துவதற்கும் ஹோட்டல் நடத்துவதற்குமே தகுதியானவர்கள் எனவும் தெரிவித்தார்.

யாழில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் எனவும் உயர் பாதுகாப்பு வலயம் என்பது அகற்றப்பட வேண்டும் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்


புதிய ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே எனது நோக்கம்

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டிய தேவை உள்ளது. புதிய அரசியல் கட்சியினை உருவாக்கியுள்ள இவ்வேளையில், மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதே எமது நோக்கம்’

காலம் காலமாக அரசியல்வாதிகள் தமது நோக்கத்தினை நிறைவேற்றிக் கொள்வதற்கான குறிக்கோளில் இருக்கின்றார்களே தவிர மக்களின் தேவைகளை நிறைவேற்றி கொள்வதில் பங்களிப்பு செய்யவில்லை.

இன்றைய அரசியல்வாதிகளில் 95 வீதமானவர்கள் ஊழல் நிறைந்த அரசியல் தலைவர்களாகவே உள்ளனர்.

புதிய அரசியல் கட்சியினை உருவாக்கியுள்ள இவ்வேளையில், மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதே எமது நோக்கமாகும்.

மக்களின் தேவைகளை அரசாங்கம் வெளி உலகிற்கு சரிவர தெரியப்படுத்தவில்லை. இதனை மக்களுக்கும் வெளியுலகிற்கும் தெரியப்பபடுத்துவதே எனது நோக்கம்.

இலங்கையில் தற்போது பொருளாதாரம் சரிவடைந்து செல்கின்ற இந்நிலையினை மாற்றி மக்களுக்கு சேவை மனப்பாங்குடனும் அர்ப்பணிப்புடனும் சேவை செய்ய வேண்டும்.

தெற்கில் மாகாணசபை இயங்குகின்றபோது, வடக்கில் மட்டும் மாகாண சபை இயக்குவதையும், மக்களின் உரிமைகளை கொடுப்பது பற்றியும் யோசிக்க வேண்டிய தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற பேதமின்றி சுயபாதுகாப்பு, அமைதி, சுய உரிமை ஒரே நாடு, ஒரே தேசம் என்ற நோக்கத்தினையுடைய புதிய அடிப்படையிலான அரசியலமைப்பினை உருவாக்குவதே எனது நோக்கம் என்றும் அவர் மேலும் கூறினார்.

Related Posts