தமிழ் மக்களின் உரிமைகளினை பெற்றுக்கொடுக்க பிரதிநிதிகள் மறந்து விட்டனர் – சஜீவன்

sajeepanதமிழ் மக்களுடைய உரிமைகளைப் பெறுவதற்காக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள், அதனை மறந்து இரணைமடு தண்ணீர்ப் பிரச்சனையினை பெரிதுபடுத்தி தங்களுக்குள் மோதிக் கொள்கின்றார்கள்’ என்று வலி.வடக்கு பிரதேச சபையின் துணைத்தவிசாளர் ச.சஜீவன் தெரிவித்தார்.

இது தொடர்பாக சஜீவனால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது,

‘அரசியல் கதிரைகளை தக்க வைத்து கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை அமைச்சர்களும், உறுப்பினர்களும் முட்டிமோதிக் கொள்ளுகின்றார்கள். இது மிகவும் கவலையான விடயமாகும்.

சமகாலத்தில் தமிழ் மக்களுடைய மிக முக்கிய பிரச்சனைகளான மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, நில அபகரிப்புக்கள், தடுப்பு கைதிகளின் விடுதலை, யுத்தத்தால் பாதிக்கபட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனை, அபிவிருத்தி போன்றவற்றை மறந்து தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் இரணைமடு நீர்பிரச்சனையை கையில் எடுத்து அதனை பூதாகரமாக்கி இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றால் போல் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் செயற்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.

இப்பிரச்சனையை இலங்கை அரசாங்கம் தீர்க்கப்போவதில்லை. 13ஆம் திருத்தத்தில் எந்த அதிகாரங்களும், தீர்வும் இல்லை என்று நிராகரிக்கப்பட்டதை 25 வருடங்களுக்கு பின் கையில் எடுத்து மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டார்கள்.

இணைந்திருந்த வடக்கு,கிழக்கை இந்தியாவின் சதித்திட்டத்தால் இலங்கை அரசாங்கம் பிரித்து வடக்கு மகாணசபை, கிழக்கு மகாணசபை என தேர்தலை நடத்திய போதும் இந்தியாவின் பொறுப்பற்ற சுயநல அரசியல் நடவடிக்கையில் வடக்கான், கிழக்கான் என்ற பிரிவினை தோற்றம் பெற்றது.

இன்று வடக்கு மாகாணசபை ஒன்று உருவாக்கப்பட்டு அதன் மூலமும் புதிய பிரிவினை சுயநல அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

1940 ஆம் ஆண்டுகளில் சட்ட சபை உறுப்பினராக இருந்த பாலசிங்கம் யாழ்.குடாநாட்டிலுள்ள உவர் நிலைகளை நன்னீர் நிலைகளாக மாற்றுவதற்கான செயற்திட்டத்தை முன்வைத்தார். ஆனால் இத்திட்டத்தை அன்றைய சுயநலதமிழ் அரசியல்வாதிகள் தடுத்தார்கள்.

அதேபோன்று இன்றும் இரணைமடு நீர்பிரச்சனையிலும் தொலைநோக்கு சிந்தனையற்ற புத்தி சுயாதீனமற்ற அரசியல் வாதிகளின் நடவடிக்கைகளால் இவ்வாறான பிரச்சனைகள் தோற்றுவிக்கப்டுகின்றன.

தமிழ் மக்களுடைய கருத்துக்களை கேட்காமல் இவர்களுடன் கலந்தாலோசிக்காமல் இந்தியாவினதும் தனிநபர்களின் ஆலோசனைகளை கேட்டு இன்று கூடிக்கதைப்பதன் நோக்கம் என்ன? 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதிக்கு பின்னர் 5 வருடங்களாக தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஒன்று சேர்ந்து முடிவெடுக்க முடியாதவர்கள் இன்று கூடுகின்றார்கள். முதலில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டால் இங்குள்ள இரணைமடு பிரச்சனைகளை இலகுவாக தீர்க்க முடியுமா?

தமிழ் மக்களுடைய இனப்பிரச்சனையில் இந்தியாவின் சொல்லுக்கு காவடி ஆடாமல் டெல்லியின் தீர்வை தமிழ் மக்களுக்கு திணிக்காமல் தமிழ் மக்கள் தம்மை தாமே ஆழ்வதற்கு தீர்வை பெற்று தரவேண்டும். இதனை தட்டிக்கழித்து தங்களது சுயநல அரசியலை

முன்னெடுப்பார்களேயானால் தமிழ்மக்கள் இவர்களை முகவரி அற்றவர்களாக மாற்றும் காலம் மிக விரைவில் இடம்பெறும்’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts