தனி ஈழம் கேட்கக் கூடாது-மதுரையில் சுஷ்மா சுவராஜ்

தமிழக அரசியல் கட்சியினரிடம் இப்போது ஒரு கேள்வி கேட்கிறேன். அங்குள்ள தமிழர்கள், தமிழ் கட்சியினர் அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட இலங்கையே தேவை என்று கூறும்போது நீங்கள் மட்டும் ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள்? அதுதான் புரியவில்லை. தனி ஈழ கோரிக்கையை பாஜக ஆதரிக்கவில்லை என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். மதுரையில் நேற்று தொடங்கிய பாஜக மாநில மாநாட்டில் கலந்து கொண்டு சுஷ்மா சுவராஜ் பேசினார்.

 

அப்போது அவர் பேசுகையில், இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய எனது தலைமையில் அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள ஒரு குழுவை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இலங்கை சென்ற எங்கள் பயணம் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்ப்பதற்காக அல்ல. அது முழுக்க, முழுக்க தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளத்தான். பல்வேறு பகுதிகளுக்கு சென்று இலங்கை தமிழர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்தோம். பின்னர் இலங்கை அதிபரிடம் இது தமிழர்களின் பிரச்சினை அல்ல.

 

ஒட்டுமொத்த இந்தியர்களின் பிரச்சினை என்று கூறினோம். அங்குள்ள தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இங்கிருக்கும் தமிழக அரசியல் கட்சியினரிடம் இப்போது ஒரு கேள்வி கேட்கவேண்டியது உள்ளது. அங்குள்ள தமிழர்கள், தமிழ் கட்சியினர் அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட இலங்கை தேவை என்று கூறும்போது நீங்கள் மட்டும் ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள்? அதுதான் புரியவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை நான் சந்தித்தபோது, ஐக்கிய இலங்கையில் இருக்கத்தான் தமிழர்கள் விரும்புகிறார்கள் என்பதைத் திட்டவட்டமாக தெரிவித்தார்.

 

மேலும், நேர்மையான அரசியல் தீர்வுதான் எங்களுக்குத் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். அனைத்துத் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கு இணையான சம உரிமைகள், கெளரவமான வாழ்க்கை வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும். அதிகாரப்பகிர்வு அமலாக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாக இருந்தது. எனவே தமிழர்கள் மத்தியில் நல்ல ஆதரவும், மதிப்பும் பெற்றுள்ள ஒரு தலைவர் அப்படிக் கூறுகையில், இங்குள்ள கட்சிகள் மட்டும் ஏன் தமிழ் ஈழத்தை வலியுறுத்த வேண்டும்?. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை எப்படி மதிக்கப்படுகிறதோ அதேபோலத்தான் நாம் இலங்கையின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மையை மதிக்க வேண்டும்.

 

இலங்கைக்கு சென்ற எம்.பிக்கள் குழுவில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. இது எம்.பிக்கள் மேற்கொண்ட சுற்றுலாப் பயணம் அல்ல. நாங்கள் அங்கு சந்தித்த அத்தனை பேரும் தங்களது பிரச்சினைகளை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் எங்களிடம் தெரிவித்தனர். நான் ராஜபக்சேவை சந்தித்தபோது இலங்கைத் தமிழர்கள் குறித்து தமிழ்நாடு மட்டும் கவலைப்படவில்லை, மாறாக ஒட்டுமொத்த இந்திய தேசமும் கவலையுடன் உள்ளதாக உறுதிபடத் தெரிவித்தேன். இலங்கை தமிழர்களுக்கு நான் ஒரு இந்திய சகோதரி என்ற முறையில் அரசியல் உரிமைகளை அவர்கள் பெறும் வகையில் விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் கருத்தினை உறுதியாக பாராளுமன்றத்தில் தெரிவித்தேன். இலங்கை அதிபர் ராஜபக்சே எனக்குக் கொடுத்த பரிசுப் பொருளை பெரிய விவகாரமாக்கி ஒரு பத்திரிக்கை என்னை சிறுமைப்படுத்தி விட்டது. அந்தப் பரிசு இந்திய ஜனநாயகத்திற்கு வழங்கப்பட்ட சிறிய கெளரவம். அதை நான் சுஷ்மா சுவாராஜாக வாங்கவில்லை. மாறாக இந்தியாவின் பிரதிநிதியாகத்தான் வாங்கினேன். மேலும் அதனை நாடாளுமன்ற கருவூலத்திலும் சேர்த்து விட்டேன். அதை நான் எடுத்துக் கொள்ளவில்லை.

Related Posts