தனியார் பஸ்சேவை முறைகேடுகளைத் தடுக்க ஜி.பி.எஸ். தொழில்நுட்பமுறை

minibusதனியார் பஸ்சேவை முறைகேடுகளைத் தடுக்க ஜி.பி.எஸ். தொழில்நுட்பமுறை விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளது. இவ்வாறு தனியார் போக்குவரத்துறை அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

கையடக்கத் தொலைபேசிகளில் உரையாடியவாறு பஸ்ஸை செலுத்துதல், வேகக் கட்டுப்பாட்டை மீறல், குறித்த இலக்கை குறித்த நேரத்துக்குச் சென்றடையாமை ஆகியவற்றை உடனுக்குடன் கண்டுபிடிக்கவே ஜி.டி.எஸ். முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அரைசொகுசு பஸ்களை முற்றாக சேவையிலிருந்து நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எதிர்காலத்தில் சாதாரண மற்றும் அதிசொகுசு பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படும்.

தூர இடங்களுக்குச் செல்வோர் விரைவில் குறித்த இடத்தை அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே அரைசொகுசு மற்றும் அதிசொகுசு பஸ்களை விரும்புகின்றனர்.

அரை சொகுசு எனும் பெயரில் சாதாரண பஸ் கட்டணத்திலும் ஒன்றரை மடங்கு பணம் வசூலிக்கும் பஸ் உரிமையாளர்கள், ஜன்னல்களுக்கு திரைச் சீலைகளை மட்டும் போட்டு விட்டு சொகுசு என்பதன் அர்த்தத்துக்குரிய எந்தவொரு வசதியையும் பெற்றுக் கொடுப்பதில்லை.

பணத்தையும் கொடுத்து பயணிகள் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவது குறித்து அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பயணிகளின் வசதியே எமக்கு முக்கியம். ஆகையால் அரைசொகுசு பஸ் சேவையை முற்றுமுழுதாக நிறுத்திவிட தீர்மானித்துள்ளோம். விரைவில் அரைசொகுசு பஸ் சேவைகள் இரத்துச் செய்யப்படும்.

தமது இலக்கை விரைவில் அடைய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காகவே பயணிகள் பணத்தை செலவு செய்து, அதிசொகுசு பஸ்களை நாடுகின்றனர்.

ஆனால் அதிசொகுசு பஸ் சாரதிகள், பயணிகள் குறித்து அக்கறையும் இல்லாமல் கையடக்கத் தொலைபேசியில் உரையாடியபடி மெதுவாக ஊர்ந்து செல்வதனை தற்போது வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அதனை எதிர்காலத்தில் தடுக்கவே ஜி.பி.எஸ். முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் பொருத்தப்பட்டிருக்கும் இந்தத் தொழில்நுட்பத்தினூடாக நாட்டின் தூர இடங்களுக்குச் செல்லும் அனைத்து பஸ்களினதும் செயற்பாடுகளை உடனுக்குடன் கண்டறிய முடியும்.

தவறு இழைக்கப்படும் பட்சத்தில் குறித்த இடத்திலுள்ள பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்குவதன் மூலம் அந்த இடத்திலேயே தண்டப்பணம் அறவிடுதல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தச் செயற்றிட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். பயணிகள் எதிர்நோக்கும் மிகுதிப் பணம் வழங்காமை பிரச்சினைக்கு தீர்வு காண அடுத்த மாதம் முதல் “ப்ரீபெயிட் கார்ட்’ முறை நடைமுறைப்படுத்தப்படும். என்றார்.

Related Posts