தனித்தன்மை வாய்ந்த டிஜிட்டல் அடையாள அட்டையின் அறிமுகம் குறித்து ஜனாதிபதி ஆராய்வு

அனைத்து குடிமக்களினதும் தனிப்பட்ட தகவல்களை வாழ்நாளில் ஒரே முறை பெற்றுக்கொண்டு வழங்கப்படவுள்ள தனித்தன்மை வாய்ந்த டிஜிட்டல் அடையாள அட்டைகளின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வினவியுள்ளார்.

புதிய அடையாள அட்டையின் மூலம் தனிப்பட்ட தகவல்களை பௌதீக ரீதியாகவும் இணையத்தின் ஊடாகவும் பார்க்க முடியும். மிகவும் சரியான தரவுகளுடன் கூடிய புதிய அடையாள அட்டைகள் பல்வேறு சட்டங்களின் கீழ் நிர்வகிக்கப்படும் திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகவல்களை உள்ளடக்கியுள்ளன.

விமானப் பயணங்கள், சாரதி அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்ளுதல் முதல் ஓய்வூதியம், சமுர்த்தி கொடுப்பனவு, வருமான வரி மற்றும் வாக்களிப்பு உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் சமர்ப்பிக்கப்படக் கூடிய உயிர்த் தகவல்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது டிஜிட்டல் அடையாள அட்டைகளின் தேவை குறித்து முன்மொழியப்பட்டிருந்தது. அதன் ஆரம்ப திட்டம் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. புதிய அடையாள அட்டைகளை தயாரிக்கும் பணி நிபுணர் குழுவொன்றின் கீழ் தகவல், தொழிநுட்ப நிறுவனத்தின் முழுமையான வழிகாட்டலின் கீழும் ஜனாதிபதி செயலணியொன்றின் கண்காணிப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அனைத்து குடிமக்களுக்கும் புதிய அடையாள அட்டைகளை மிக விரைவில் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

நேற்றையதினம் (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு அமைச்சின் உதவிச் செயலாளர்களான வருண தனபால, யு.கே பண்டார, குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் வீ.பீ சரத் ரூபாசிறி, ஆள்களை பதிவுசெய்யும் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக, பதிவாளர் நாயகம் என்.சீ. விதானகே, தகவல் தொழிநுட்ப நிறுவனத்தின் தலைவர் ஜயன்த டி சில்வா, தலைமை நிறைவேற்று அதிகாரி மஹிந்த ஹேரத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Posts