ஜனவரி 9 இல் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்வு

எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆராய்ந்துவருவதாக அரச தரப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

mahintha

அந்தவகையில் ஜனாதிபதி தேர்தலை அடுத்தவருடம் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி நடத்துவது குறித்து ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்துவருவதாக ஜனாதிபதியின் நெருங்கிய முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலம் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு நிறைவடையவுள்ள போதிலும் இரண்டு வருடங்கள் முன்னதாகவே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருந்தந்தை அடுத்தவருடம் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு சில தினங்களுக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கு அவருக்கு ஆட்சேபனை இல்லை என்ற விடயத்தை அண்மைய வத்திக்கான் விஜயத்தின்மூலம் அரசாங்கம் உறுதிபடுத்திக்கொண்டிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவித்தன.

காரணம் நாடு ஒன்றில் தேர்தல் பிரசாரக்காலம் நடைமுறையில் இருக்கும்போது பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருந்தந்தை குறித்த நாட்டுக்கு விஜயம் செய்யமாட்டார் என்பது தற்போதைய பாப்பரசர் கடைபிடித்துவரும் ஒழுங்குமுறையாகும்.

அதனடிப்படையிலேயே பாப்பரசரின் விஜயத்துக்கு சில தினங்களுக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறலாம் என்பதனை அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல அண்மையில் உறுதிபடுத்தியிருந்தார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற நான்கு வருடங்களுக்கு மற்றுமொரு தேர்தலுக்கு செல்வதற்கு அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதால் அவர் அந்த உரிமையை பயன்படுத்தவுள்ளார் என்றும் அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலை உறுதிபடுத்தும் வகையில் அடுத்தவருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தையும் அரசாங்கம் இவ்வருடம் முன்னதாகவே சமர்ப்பிக்கவுள்ளது.

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது வழக்கமாகும். ஆனால் இம்முறை அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் இம்மாதம் 24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு இறுதிவாக்கெடுப்பு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தல் நிறைவடைந்ததுமே அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது குறித்து கவனம் செலுத்தியது. ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் உடனடியாகவே அடுத்ததாக ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் அடுத்த ஜனாதிபதி தேர்தலை 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்துவதற்கே தீர்மானிக்கப்பட்டதாக அறிய முடிந்தது. எனினும் ஊவா தேர்தல் முடிவுகளின் பின்னர் ஜனவரி மாதமே தேர்தலுக்கு செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்க ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளார். அரசியலமைப்பின் பிரகாரம் அவர் மூன்றாவது தடவையாக போட்டியிட முடியாது என்று முன்னாள் பிரதம நீதியரசரும் எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்களும் தெரிவித்துவருகின்றனர்

இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்று சிரேஷ்ட சட்டத்தரணிகளான நிஹான் ஜயமான்ன மற்றும் கோமின் தயாசிறி ஆகியோர் கடந்தவாரம் தெரிவித்தனர்.

கொழும்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் கருத்து வெளியிட்ட இந்த சட்டத்தரணிகள் மூன்றாம் தடவையாக போட்டியிடுவதில் அரசியலமைப்பில் எவ்விதமான சட்ட சிக்கலும் இல்லை. சிலர் இறந்து அடக்கம் செய்யப்பட்ட சட்டங்களுக்கு உயிர்கொடுக்க முயற்சிக்கின்றனர் என்று குறிப்பிட்டனர்.

மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்று ஒரு சிலரினால் முன்வைக்கப்பபடும் தர்க்கம் விவாதிக்கவேண்டிய விடயமே அல்ல. அவ்வாறு ஒரு பிரச்சினையே சட்டத்தில் இல்லை. ஜனாதிபதியினால் அடுத்தத் தேர்தலில் போட்டியிட முடியும் என்றும் இவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் நாட்டில் கடந்த சில வாரங்களாகவே ஜனாதிபதி தேர்தலுக்கான அரசியல் காய்நகர்த்தல்கள் மற்றும் நகர்வுகள் ஆளும் கட்சி மட்டத்திலும் எதிர்க்கட்சிகளின் சார்பிலும் நடத்தப்பட ஆரம்பித்துவிட்டன.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே போட்டியிடவுள்ளார் என்ற நிலையில் மிக அதிகளவில் எதிர்க்கட்சிகளே அரசியல் காய்களை நகர்த்திவருகின்றன. எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதா அல்லது தனித்தனி வேட்பாளர்களை நிறுத்துவதா என்பது குறித்து எதிர்க்கட்சிகள் ஆராய்ந்துவருகின்றன.

இதேவேளை லண்டனில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் சந்தித்த்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து பேச்சு நடத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை போட்டியிடவேண்டாம் என்றும் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குமாறும் சந்திரிகா குமாரதுங்க கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு இதுவே சிறந்த தருணம் என்றும் பொதுவேட்பாளர் வெற்றிபெற்ற பின்னர் நிறைவேற்று முறைமையை நீக்கி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமராகும் வாய்ப்பு ஏற்படும் என்று சந்திரிக்கா குமாரதுங்க எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் எடுத்துக்கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் எதிர்க்கட்சிகளினால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் எவரும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெற்றது. இதில் 57.88 வீதமான வாக்குகளை பெற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினார். எதிரணியில் பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகா 40.15 வீதமான வாக்குகளை பெற்றிருந்தார். கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts