ஜனவரி முதல் காப்புறுதி செய்யத் தவறும் மீனவர் கடலுக்கு செல்லத் தடை!

fishing-boat_CIகடற்றொழிலாளர்களுக்கென அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காப்புறுதி திட்டத்தின் கீழ் காப்புறுதி செய்துகொள்ளாத மீனவர்கள் எவரும் ஜனவரி முதல் கடற்றொழிலுக்கு செல்ல முடியாது, என்ற நடைமுறை அமுல்படுத்தப்படும் என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

அத்துடன் அனர்த்தங்கள் குறித்து மீனவர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கவும் ஏனைய நாடுகளின் கடல் பரப்பினுள் நுழைவதை தடுக்கவும் ஜனவரி முதலாம் திகதி முதல் ‘படகுகள் கண்காணிப்பு செயல்முறை (VMS – Vessel Monitoring System) ஒன்றும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ராஜித தெரிவித்தார்.

காலநிலை முன்னெச்சரிக்கை விடும் முறையிலுள்ள தொழில்நுட்ப தவறினாலே மீனவர்கள் பலர் பலியாகினர். காலநிலை அவதான நிலையத்தின் தவறல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

மீனவர்களுக்கு 10 ஆயிரம் பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டுள்ள போதும் அவர்கள் அவற்றை பயன்படுத்துவதில் அக்கறை கட்டாதிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற கடும் காற்றினால் பல மீனவர்கள் இறந்தது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளித்த அமைச்சர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

மேலும் இரு மீனவர்களின் சடலங்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அனர்த்தத்தினால் இறந்தோர் தொகை 61 ஆக உயர்ந்துள்ளது. 8 பேர் காணாமல் போயுள்ளனர். முற்றாக அழிந்த மற்றும் காணாமல் போன படகுகளின் தொகை 84 ஆகும். 76 படகுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

மீனவர்களுக்கான காப்புறுதி திட்டத்தில் குறைந்தளவு மீனவர்களே இணைந்துள்ளனர். இறந்த 61 மீனவர்களில் 4 பேர் மட்டுமே காப்புறுதி செய்துள்ளனர். வருடாந்தம் 750 ரூபா மட்டுமே மீனவரிடம் அறவிடப்படுகிறது. காப்புறுதி செய்யாத மீனவர்களின் குடும்பங்களுக்கும் இம்முறை ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்கப்படும் என்றார்.

இந்தப் பின்னணியில் வடபகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் கணிசமான எண்ணிக்கையில் மீனவர்கள் காப்புறுதி செய்திருப்பதாகவும், இது தென்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதாகவும் மன்னார் கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் பெனடிக்ற் சகாயநாதன் மிராண்டா கூறுகின்றார்.

அண்மையில் வீசிய கடும் காற்று மற்றும் சீரற்ற கடல் நிலை காரணமாக பெரும் எண்ணிக்கையான மீனவர்கள் உயிரிழந்திருப்பதையடுத்தே, மீனவர்கள் கட்டாயம் காப்புறுதி செய்திருக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்திருப்பதாகவும் மிராண்டா தெரிவித்தார்.

காப்புறுதி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து கடற்தொழில் திணைக்களம் இந்த காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. வருடாந்தம் 750 ரூபா மற்றும் 1500 ரூபா என இரண்டு வகையாகப் பணம் செலுத்த வேண்டிய வகையில் வைத்திய தேவைக்கான கொடுப்பனவு, உயிரிழப்புக்கான கொடுப்பனவு என்ற வகையில் இந்தக் காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது எனவும் மன்னார் கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் மிராண்டா கூறினார்.

இருந்த போதிலும் யுத்த மோதல்கள் தீவிரமாக இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழ்வாதார முயற்சிகள் இன்னும் சீராக இடம்பெறாத காரணத்தினால், வறுமை காரணமாக மீனவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே காப்புறுதி செய்திருகின்றார்கள்.

வறுமை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மீனவர்கள் தமது பகுதியில் காப்புறுதி செய்து கொள்ள முடியாதிருப்பதாக முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலாளரான சிவராசா கிருபாகரன் கூறுகின்றார்.

Related Posts