செப்டம்பரில் அமெரிக்காவில் ஒபாமாவைச் சந்திக்கிறார் மோடி?

இந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்காவில் ஒபாமாவைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

modi

கடந்த மாதம் இந்தியாவின் 15-வது பிரதமராக பதவியேற்றுக் கொண்டார் நரேந்திர மோடி. அவருக்கு தொலைபேசி வாயிலாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வாழ்த்து தெரிவித்தார். மேலும், அப்போது மோடிக்கு அமெரிக்கா வருமாறு அழைப்பும் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தாண்டு இறுதியில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின் போது இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதற்கு முன்னதாக வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் வாஷிங்டன் நகரில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளில் இரு நாட்டு அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒபாமாவுடனான மோடியின் இந்த சந்திப்பு கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, தேவ்யானி கோப்ரகடே விவகாரத்தில் இந்தியா- அமெரிக்கா உறவில் உண்டான சிறிய விரிசலை சரி செய்வதாக அமையும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

மோடிக்கு விசா வழங்குவதில் தயக்கம் காட்டிய அமெரிக்கா, மத்தியில் அமையும் புதிய அரசுடன் நல்லிணக்கமாக செயல்பட விரும்புவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts