சென்னை பேச்சுவார்த்தைக்கு வடக்கு மீனவ பிரதிநிதிகளுக்கு அழைப்பில்லை’

Flag-Pins-India-Sri-Lankaஇலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கான பேச்சுவார்த்தைக்கு வடமாகாண மீனவ பிரதிநிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை இன்று தெரிவித்தார்.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சம்மேளன கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய எமிலியாம்பிள்ளை, ‘இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி சென்னையில் இந்திய மீனவ சங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக தேசிய மீனவர் பேரவையின் பொதுச் செயலாளர் இளங்கோவன் தெரிவித்திருந்தார்.

இந்திய மீனவர்களினால் தென்பகுதி மீனவர்களை விட வட பகுதி மீனவர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். அந்த வகையில், வடபகுதி மீனவர்கள் சார்ந்த பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் அப்பிரச்சினைகளுக்கான தீர்வு சரியான முறையில் கிடைக்காது.

இருப்பினும் இந்த பேச்சுவார்த்தைக்கு தென்பகுதி மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசத்தால் வட மாகாண மீனவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறானதொரு நிலையில், வட மாகாண மீனவர்களைத் தவிர்த்து பேச்சுவார்த்தை நடத்துவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

இலங்கை – இந்திய கடற்பரப்பில் எல்லைகள் கிடையாது என இளங்கோவன் தெரிவித்திருந்தார். நான் கேட்கிறேன், அவ்வாறு எல்லைகள் இல்லாவிட்டால், ஏன் இரு நாட்டு மீனவர்களையும் கைது செய்ய வேண்டும்? கைது செய்யாமல் தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கியிருக்கலாமே’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts