சு.க.வில் இணையுமாறு யாழ். பட்டதாரிகளுக்கு நாமல் அழைப்பு

Namal-rajabakshaஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ளுமாறு சுதந்திர பட்டதாரி சங்கத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் ராமநாதன் தலைமையில் நடைபெற்ற யாழ். மாவட்ட சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் பட்டதாரிகள் மாநாட்டில் கலந்துகொண்டு பட்டதாரிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இந்த மாநாட்டின் போது பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது உயர்தொழில்நுட்ப பட்டதாரிகள் சிலர், ‘தாங்கள் எந்த கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல என்றும் தங்களுக்கு இதுவரை அரச நியமனங்கள் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம்’ என்றும் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், ‘எங்கள் கோரிக்கைகள் தொடர்பில் அரச அதிபரிடம் முறையிட்ட போதும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் எங்கள் நியமனம் தொடர்பில் நாங்கள் நீதிமன்றம் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது’ என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்ஷ, ‘வேலையற்ற பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் சுதந்திர பட்டதாரிகள் சங்கம் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றது. தாங்கள் எந்த கட்சியை சார்ந்தவர்கள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். முதலில் பட்டதாரிகளாகிய நீங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளுங்கள்’ என்றார்.

‘உயர் தொழில்நுட்ப பட்டதாரிகளின் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கொன்று நிலுவையில் உள்ளதால் உடனடியாக எதுவும் செய்ய முடியாதுள்ளது. உடனடியாக உயர் தொழில்நுட்ப பட்டதாரிகள் வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்றும் அவ்வாறு பெற்று இரண்டு வாரங்களுக்குள் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், ‘நாடு பூராகவும் 15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக’ தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, கடந்த காலத்தில் எந்த ஒரு அரசாங்கத்தாலும் செய்ய முடியாதபடி அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கம் பெருமளவிலான பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது’ என்றார்.

‘2005ஆம் ஆண்டுக்கு முன்னர் பட்டதாரிகள் பல்வேறு நெருக்கடிகளையும் துன்பங்களையும் எதிர்நோக்கி வந்தனர். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து 36 ஆயிரம் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன. இவ்வருடம் மேலும் 15 ஆயிரம் பேருக்கு அரச நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக’ அவர் தெரிவித்தார்.

‘யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இங்கு பல்வெறு அபிவிருத்திப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்களின் தேவைகள் என்ன என்பதை கருத்திற்கொண்டு பணியாற்ற வேண்டும் என்று பணிப்புரை விடுத்துள்ளார்’ என்றார்.

அத்துடன், ‘2009ஆம் ஆண்டு யுத்தத்திற்குப் பின்னர் கடந்த 3 மூன்று ஆண்டுகளில் வடக்கில் 6 ஆயிரம் பேருக்கு அரச நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் யாழ் மாவட்டத்தில் இருந்தும் 1300 பட்டதாரிகள் கடந்தவருடம் அரச பணியில் இணைத்துக் கொள்ளப்படடுள்ளனர்’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts