யாழ். மாவட்ட சுகாதார தொண்டர்களுக்கு ஏப்ரல் மாதம் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என வட மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
வட மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆர்.ரவீந்திரன், யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் மற்றும் சுகாதார தொண்டர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக மாகாண சுகாதார அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“சுகாதார தொண்டர்களுக்கான நியமன வெற்றிடங்கள் இதுவரையில் இல்லை. எனினும் வெற்றிடங்கள் தேவைப்படும் பட்சத்தில் எதிர்வரும் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் மத்திய சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடிய பின்னர் சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும்” என்றார்.
இந்த சந்திப்பு சுகாதார தொண்டர்கள் கருத்து தெரிவிக்கையில்,
“வட மாகாண சுகாதார அமைச்சரின் வாக்குறுதியினை தொடர்ந்து, தமது போராட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம். எனினும் ஏப்ரல் மாதம் நிரந்தர நியமனம் தமக்கு வழங்கத் தவறினால் மீண்டும் தமது போராட்டத்தினை முன்னெடுப்போம்” என்றனர்.