சுகாதாரத் தொண்டர்கள் போராட்டம், அரசு கவனம் செலுத்தவேண்டும் – பா.அரியநேத்திரன்

areyaneththeranயாழ். போதனா வைத்தியசாலையின் சுகாதாரத் தொண்டர்கள் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்பில் அரசு கவனம் செலுத்தவேண்டும். ஏழு நாள்களுக்கும் மேலாக அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.கடந்த காலங்களில் அவர்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தனர். எனவே, அவர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும்.இவ்வாறு நேற்று முன்தினம் நாடாளுமன்றில் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன்.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு இந்திய வீடமைப்புத்திட்டம் போதுமானதல்ல. எனவே, வடக்கு, கிழக்கில் பொது வீடமைப்புத் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும் என்றும் அவர் சபையில் கோரிக்கை விடுத்தார்.

மலையக மக்களின் நிலவுரிமையைப் பறிப்பதற்காகவே மாடி வீடமைப்புத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறியவை வருமாறு:

நகர அபிவிருத்தித் திட்டத்தினூடாகத் தலைநகரில் வீட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வந்தாலும் 30 வருடகால ஆயுதப் போராட்டத்தைச் சந்தித்த வடக்கு, கிழக்கு பகுதிகளில் பொது வீட்டுத்திட்டங்கள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. இந்திய வீடமைப்புத் திட்டமும் போதுமானதல்ல. மீள்குடியேற்ற வீடமைப்புத் திட்டங்களுக்குப் புறம்பாக வீடுகள் உருவாக்கப்பட வேண்டும்.

பொதுவசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படல் வேண்டும். ஆனால் எமது மக்கள் இன்னமும் பொது வசதிகள் கூட அற்றவர்களாகவே வாழ்கின்றனர்.

அதேவேளை, மட்டக்களப்பில் யானைகள் பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. பட்டிப்பளை, வெல்லா வெளி, வவுணதீவு, செங்கலடி போன்ற பகுதிகளில் பல வீடுகளைத் தாக்கி யானைகள் சேதப்படுத்தியுள்ளன. உயிர் அச்சுறுத்தல் பிரச்சினைக்குப் புறம்பாக இந்தப் பிரச்சினையும் பெரும் நெருக்கடியாக இருக்கின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நஷ்டஈடு வழங்கப்படவில்லை. வீடுகளை இழந்த மக்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன்.

குறிப்பாக, 2009 ஆம் ஆண்டு மே 19ஆம் திகதிக்குப் பின்னர் முன்வைக்கப்பட்ட பட்ஜெட்களில் போரினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்காக விசேட முன்மொழிவுகள் எதுவும் இல்லை.எனவே, அடுத்த வருடத்திலாவது விசேட முன்மொழிவுகள் இடம்பெற வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் எமது முஸ்லிம் சகோதரர்களின் சுனாமி வீட்டுத்திட்டம் இன்னமும்  கையளிக்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கு சகல வசதிகளுடனும் இதை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன், ஊடகவியலாளர்களுக்கும் மானியம் அல்லது கடன் அடிப்படையில் நிரந்தர வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

மலையக மக்கள் நிலவுரிமை இல்லாமலேயே வாழ்கின்றனர். இதைத் தொடர்ந்தும் அதே நிலையில் வைத்திருக்கவா மாடி வீட்டுத்திட்டம் முன் வைக்கப்பட்டுள்ளது? தனி வீட்டுத் திட்டம்தான் மலையக மக்களுக்கு சிறந்த தீர்வாகும். 50 ஆயிரம் அல்ல 25 ஆயிரம் வீடுகளை வழங்கினால்கூட அவற்றைத் தனித் தனியாக வழங்குங்கள் – என்றார்.

Related Posts