சிறுமியை கொன்ற நபருக்கு அதிஉயர் தண்டனை தாருங்கள் நீதிமன்றில் பெற்றோர் உருக்கம்

நெடுந்தீவில் 13 வயதுச் சிறுமியைப் படுகொலை செய்த குற்றவாளிக்கு அதி உயர் தண்டனை வழங்கும்படி நேற்று நீதிமன்றில் வலியுறுத்தினர் சிறுமியின் பெற்றோர். நீதிமன்றில் நீதிவான் ஆர்.எஸ்.மகேந்திரராஜா முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய், தந்தை மற்றும் சடலத்தை முதற்கண்ட சாட்சி ஆகிய மூன்று பேரினதும் சாட்சியங்கள் நேற்றுப் பதிவு செய்யப்பட்டன.

சாட்சியமளித்த பின்னர் மேலதிகமாக என்ன கூறவிரும்புகிறீர்கள் என்று மன்றில் பெற்றோரிடம் கேட்டபோது, குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று கூறினர்.நெடுந்தீவைச் சேர்ந்த 13 வயதுடைய ஜேசுதாசன் லக்சினி கடந்த 3ஆம் திகதி கொடூரமான பாலியல் வன்புணர்வின் பின்னர் கல்லால் குத்தி தலை சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்தப் படுபாதகச் செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கந்தசாமி ஜெகதீஸ்வரன் (வயது 31) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.விளக்க மறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் நேற்று மன்றில் முற்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்றது.அதன்போதே சந்தேக நபரின் இரத்த மாதிரியைப் பெற்று கொழும்பு சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரி பணிமனைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது. சிறுமியின் ரத்தம் தோய்ந்த ஆடைகள் சான்றுப் பொருளாக எடுக்கப்பட்டிருந்தன. சடலம் காணப்பட்ட இடத்தில் நிலத்திலும் சிறுமியின் உடலிலும் இருந்த ஒருவகைத் திரவமும் சான்றுப் பொருளாக எடுக்கப்பட்டிருந்தன.

சிறுமியின் மேற்சட்டையின் உள்ளும் புறமுமாக காணப்பட்ட முடிகள் மீட்கப்பட்டன. சடலத்துக்கு அருகேயிருந்து மீட்கப்பட்ட 250 மில்லிலீற்றர் மதுப்போத்தலில் பதிவாகியிருந்த கைவிரல் அடையாளத்தையும் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.

சடலத்தின் ஒரு கையில் பற்கள் பதிந்த அடையாளம் காணப்பட்டது. அந்தத் தசைப் பகுதி வெட்டியெடுக்கப்பட்டிருந்தன. அது சந்தேக நபருடைய பல் அடையாளமா என்று ஆராய சந்தேக நபரின் பல் அமைப்பைப் பரிசோதனை செய்யவும் மன்று உத்தரவிட்டுள்ளது. விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சந்தேக நபரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிவான் உத்தரவிட்டார்

Related Posts