சிகிச்சைக்கு சென்றவர் சடலமாக மீட்பு

body_foundமருதங்கேணி பிரதேச அரசினர் வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலை விடுதிக் கட்டடத்துக்கு அருகில், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டார்.

உடுத்துறை வடக்கைச் சேர்ந்த அருமைத்துரை பரிமேலழகன் (வயது43) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர்.

காய்ச்சலுக்குச் சிகிச்சை பெறுவதற்காகக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இவர் குறித்த வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு அடிக்கடி வலிப்பு நோயும் ஏற்படுவதுண்டு. இதனால் இவரை மேலதிகச் சிகிச்சைக்காக பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலைக்கு மாற்ற மருத்துவர்கள் முயற்சித்தபோதும், அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

இதனால் அவருக்கு அங்கேயே தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவரைப் பார்வையிடுவதற்காக உறவினர்கள் நேற்றுக் காலை வைத்தியசாலைக்கு வந்தனர்.

அப்போதே குறித்த நபர் வைத்தியசாலை வளாகத்துக்குள் முகம் குப்புறக் கவிழ்ந்த நிலையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். இவரின் மரணத்துக்கு வைத்தியசாலையின் கவனயீனமே காரணம் என்று அவரது உறவினர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இதுதொடர்பில் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, பிரஸ்தாப நோயாளியை நோயாளர் விடுதியில் தங்குமாறு வைத்தியசாலைத் தரப்பினர் கூறியிருந்தனர்.

எனினும் அவர் அடிக்கடி வைத்தியசாலைக்கு வெளியே சென்று, விடுதிக்கு வெளியிலேயே உறங்கியுள்ளார். சிசிச்சை பெறும்போதுகூட இவர் மதுபானம் அருந்தி வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. எனவே இறப்புக்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். என்றார்.

இவரது மரணம் குறித்து பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா, மரண விசாரணை மேற்கொண்டு, உடற்கூற்றியல் பரிசோதனைக்குப் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். மருதங்கேணிப் பொலிஸார் விசாரணைக்கான சாட்சியங்களை முன்னிலைப்படுத்தினர்.

Related Posts