கூட்டமைப்பை பதிவு செய்து மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றவேண்டும்: சகாதேவன்

tnaதமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து தலைமை சக்தியாக வளர்த்து மக்கள் அவர்களுக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்றவேண்டும் தவறினால் மக்கள் அவர்களை தூக்கியெறிந்துவிட்டு மாற்று வழியொன்றினை தேடக்கூடும் என்று போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் சகாதேவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழரசுக் கட்சியினதும், தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் ஆரம்பகால மேடைப்பேச்சுகளில் ‘மரம் பழுத்தால் வெளவால்கள் வரும்;’ என்றார்கள், ‘துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சுமெத்தை’ என்றார்கள்.

மரம் நிறையவே பழுத்தது. வெளவால்கள் நிறையவே வந்தன. முதலில் ,இந்திய வெளவால்கள் வந்தன. பின்னர் நோர்வேயின் அனுசரனையோடு ஐரோப்பிய வெளவால்கள் வந்தன. அமெரிக்க பின்னணியோடு கிழக்கு பகுதியிலிருந்து சில வெளவால்கள் வந்தன. பழங்களும் முடிந்தன. வெளவால்கள் இப்போது வருவதில்லை எமது பழங்கதைகளும் முடிந்து போயின. போன வெளவால்கள் திரும்பி வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

பழமொழி கூறும் பழமை வாத அரசியல் வாதிகள் இன்னும் எம்மோடு இருக்க தோட்டக்காரன் போல் பாடுபட்டு கனி தரும் விருட்சங்களாகிய மக்களை காத்து வந்த முன்னாள் போராளிகளும் இன்று கவனிப்பாரற்று விரக்தியின் விளிம்பில் நிற்கிறார்கள். நான் இதற்கு முன்பும் பல தடவைகள் கூறியிருக்கிறேன். போரால் பாதிக்கப்பட்ட மக்களையும், முன்னாள் போராளிகளையும் அரசியல் வேலைத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளுங்கள் என்று. இன்றுவரை இதனை செய்தீர்களா?

மன்னார் ஆயர் அதிவணக்கத்திற்குரிய இராயப்பு யோசப் தொடக்கம், பிரதம நீதியரசர் சி.விக்கினேஸ்வரன் வரை எத்தனை புத்திஜீவிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய உங்களிடம் மன்றாட்டாக கேட்டிருக்கிறார்கள்.

தயவுசெய்து கூட்டமைப்பை பதிவு செய்து தலைமை சக்தியாக வளர்த்து எடுங்கள் என்று. உங்கள் கட்சிக்குள்ளே எத்தனை பேர் இதுவரை போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்? எதற்கு நீங்கள் இதுவரை செவி சாய்த்திருக்கிறீர்கள்? உங்கள் கட்சியின் யாப்பை வெளியிடுங்கள், கிராம மட்ட அலுவலகங்களை திறவுங்கள் என்று எத்தனை முறை மக்கள் உங்களை கேட்டிருக்கிறார்கள் என்றும் அவர் வினவினார்.

மக்களின் குறிப்பறிந்து செயற்பட வேண்டிய நீங்கள் இதுவரை 10 வருடத்திற்கு மேலாக ஒரு கட்சியை பதிவு செய்ய வக்கற்ற நீங்கள், உங்களுக்கு ஒரு ஆபத்து என்றவுடன் உடனே சிங்களவன் அடிக்கிறான், இராணுவப்புலனாய்வு மிரட்டுகிறது என்று அறிக்கை விட்டவுடன் மக்களின் பிரச்சனை தீரப்போவதில்லை.

உங்களை கேள்வி கேட்க வந்தவர்களை நோக்கி உங்கள் அலுவலகத்திலிருந்து ஒரு கல்லையாவது நீங்கள் வீசி எறியவில்லை என்று உங்களால் சத்தியம் செய்து கூற முடியுமா? உங்களை நோக்கி வந்தவர்களில் இருந்த வயோதிபர்களும், முன்னாள் போராளிகளும் என்ன சிங்களவர்களா? உங்கள் புத்தி சாதுரியமற்ற செயற்பாடுகளால் 1980களில் ஏற்பட்ட நிலமையை நீங்களாகவே ஏற்படுத்த போகிறீர்களா?

உங்களை எதிர்ப்பவன் எல்லாம் துரோகிகள் என்று பட்டம் சூட்டுவீர்களாயின் உங்களை நோக்கி பல குற்றச்சாட்டுக்கள் மேலெழும் சாத்தியம் நிறையவே உள்ளது. தமிழ் மக்கள் பொங்கியெழத்தொடங்கி விட்டனர். இனிமேல் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு யாரையும் காரணம் கூறி நீங்கள் தப்பிக்க முடியாது. தமிழ் மக்கள் ஆணை தந்தது உங்களுக்குத்தான்.

வேறு யாரையும் பொறுப்பாக்கி நீங்கள் தப்பமுடியாது. மக்கள் உங்களுக்கு தந்த ஆணையை நீங்கள் நிறைவேற்றத்தவறினால் உங்களை தூர தூக்கியெறிந்துவிட்டு மாற்று வழியொன்றினை மக்கள் தேடக்கூடும். உண்மையாகவே மாற்று வழியொன்றை இனங்காண்பதற்கு போரால் பாதிக்கப்பட்டு பல்வேறு துன்பங்களை சந்தித்த மக்கள் தயாராகி வருகின்றார்கள். இதுதான் யதார்த்தமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts