கூட்டமைப்பு- அரசாங்கம் பேச்சுவார்த்தை இணக்கமின்றி தொடர்கிறது!

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை (19.12.2011) இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கமின்றி முடிவடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு காணி அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியதுடன் இதற்காக இந்திய மாநிலங்கள் மற்றும் ஏனைய நாடுகளின் காணி அதிகாரங்களை பற்றி அரசாங்கத் தரப்பினருக்கு சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், அரசாங்கத்தரப்பு காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தின் வசமே இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

எனவே, இன்றைய பேச்சுசவார்த்தையில் எவ்வித ஆக்கபூர்வமான கருத்துக்களும் பரிமாறப்படவில்லை என தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாளை இடம்பெறும் சந்திப்பின்போது அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளுக்கான திகதி நிர்ணயிக்கப்படும் என்றும் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்வைத்த தீர்வுப்பொதி, மங்கள முன்சிங்க நாடாளுமன்றக்குழுவின் பரிந்துரை மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் ஆணைக்குழு ஆகியவையும் காணி அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தி நிற்பதாக சுரேஸ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பாக அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனவரி மாதம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மூன்று சுற்று பேச்சுவார்தைகள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Related Posts