குற்றவாளிகளுக்கு இராஜவாழ்க்கை,அரசியல் கைதிகளுக்கு சிறைத்தண்டனையா? – அனந்தி

ananthi_sashitharanஇலங்கையில் பாரிய குற்றங்களைச் செய்த பலர் இராஜபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் போது சாதாரண குற்றம் செய்த தமிழ் இளைஞர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

மகசின் சிறைச்சாலையில் கடந்த 24ஆம் திகதி மரணமான அரசியல் கைதியான விஸ்வலிங்கம் கோபிதாஸனின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை தேவை என்பதை வலியுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் மேற்கொள்ளப்பட்டது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கைதிகள் இன்று நேற்றல்ல காலம் காலமாக சிறைச்சாலைகளில் கொல்லப்பட்டும் சித்திரவதை செய்தும் வருகின்றனர். அதற்கு எதிராக நாம் குரல் கொடுத்து வந்தாலும் சிங்கள ஏகாதிபத்திய அரசு தான் நினைத்ததையே செய்து வருகின்றது. எனவே ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டினை நல்லசந்தர்ப்பமாக பயன்படுத்தி இவ்வாறான பிரச்சினைகளை நாம் சர்வதேசத்திற்கு கொண்டுவர வேண்டிய நிலையில் உள்ளோம்.

அத்துடன் இன்று(நேற்று) இந்த போராட்டத்தில் சிறியளவிலானவர்களுடைய பங்களிப்பும் பார்வையாளர்களாக அதிக எண்ணிக்கையிலானவர்களே உள்ளனர். எனினும் இலங்கையில் பாரிய குற்றங்களைச் செய்த பலர் இராஜபோக வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது சாதாரண குற்றம் செய்த தமிழ் இளைஞர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்து வருகின்றனர். எனவே இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

மேலும் நாட்டில் போர் முடிந்து விட்டது என்றும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர் என்றும் அரசு சர்வதேசத்திற்கு கூறிவருகின்ற நிலையில் தொடர்ந்தும் எமது தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட இளைஞர்கள் சிறையல் அடைக்கப்பட்டுள்ளார்கள் எனவே இது ஒரு இன அழிப்பாகவே கருதமுடியம்.

எனவே அரசு தொடர்ந்தும் இவர்களை சிறையில் வைத்து சித்திரவதை செய்யாது அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.மேலும் இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் கொல்லப்படுவதை தடுக்கும் முகமாக நாம் தொடர்ந்தும் சர்வதேச ரீதியிலான போராட்டங்களை நடத்திக் கொண்டு இருப்போம் என்றார்.

Related Posts