குறுகிய காலத்திற்குள் 68 பிரேரனைகளை வடக்கு மாகாணசபை நிறைவேற்றியுள்ளது – சந்திரகுமார்

மிகக்குறுகிய காலத்திற்குள் 68 பிரேரனைகளை நிறைவேற்றியதோடு அவற்றில் எதனையும் செயற்படுத்தாத சபையாக வடக்கு மாகாணசபை காணப்படுகின்றது என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேச சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

chanthera-kumar

நேற்று பெரிய பரந்தன் கிராமத்திற்கான மின் விநியோகத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்.

வடக்கு மாகாண சபை கடந்த எட்டு மாதங்களாக இயங்காத சபையாகவும் மக்களின் தேவைகள் பிரச்சினைகள் தொடர்பில் எந்த விதமான கரிசனையும் அக்கறையும் கொள்ளாத சபையாகவும் காணப்படுகின்றது. இந்நிலையில் சுமார் 68 பிரேரனைகளை நிறைவேற்றிய சபையாக மட்டுமே அது அமைந்துள்ளது.

அச்சபை வடக்கு மாகாண சபை என்ற நோக்கிற்கு அப்பால் யாழ்ப்பாண மாகாணசபை எனக்குறிப்பிடும் அளவுக்கு அதன் அனைத்து பிரதிநிதிகளும் அங்கேயே நிலைகொண்டிருக்கின்றார்கள். அவர்கள் எப்போதும் இவ்வாறான பின்தங்கிய கிராமங்களைத் தேடி வருவதில்லை ஆனால் தேர்தல்காலங்களில் மட்டும் அவர்கள் மக்களின் கதவுகளைத்தட்ட மறப்பதில்லை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்.

நாம் அவ்வாறான செயற்பாடுகளைக் கொண்டவர்கள் அல்ல எப்போதும் மக்களுடனேயே வாழ்ந்து மக்களின் உண்மையான பிரச்சினைகளை அறிந்து சேவையாற்றி வருகின்றோம் அத்தோடு முடிந்தவரை மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொடுத்தும் வருகின்றோம் எனவும் குறிப்பிட்டார்.

அதன் அடிப்படையிலேயே பெரிய பரந்தன் கிராமத்திற்கான பிரதான வீதியை புனரமைப்பதற்கான கோரிக்கைகளையும் மக்கள் எம்மிடம் முன்வைத்துள்ளார்கள். பொதுவாக இங்குள்ள பிரதேச சபைக்குரிய வீதிகளை பிரதேசசபையின் எதிர்கட்சியாக இருந்த போதும் நாமே செப்பனிட்டு வருகின்றோம். ஏனெனில் பிரதேச சபைகளிடம் மக்களுக்கு நிறைவான சேவையாற்றக்கூடிய மன உணர்வில்லை ஆகவே பெரிய பரந்தன் வீதியையும் புனரமைப்பதற்கு நாம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதற்கு மிகப் பெருந்தொகையான நிதி தேவைப்படுவதால் அதற்கான நிதிவளத் பெறுவதற்கு நாம் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றோம். ஏனெனில் பொறுப்புக்களை ஏற்றவர்கள் தமக்குரிய பொறுப்பை உணர்ந்து செயற்படாத நிலையில் நாமும் மக்களின் அவலங்களைக் கண்டு கொண்டு அவற்றை நிவர்த்தி செய்யாது இருந்து விட முடியாது எனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு இங்குள்ள தேர்தல்கால அரசியல் வாதிகளை விட அரச அதிகாரிகள் மக்களை நேசிக்கின்றார்கள் அதனடிப்படையில் அவர்கள் நேரகாலங்களைக்கூட பொருட்படுத்தாது செயற்பட்டு வருகின்றார்கள். எனவே அரசியல் இலாபத்தை மட்டும் இலக்காக கொண்ட அரசியல்வாதிகளுக்கு மக்களே பாடம் கற்பிக்கவேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள்

பெரிய பரந்தனில் சுமார் 60 விகிதமான குடும்பங்கள் வீட்டுத்திட்டத்தைப் பெறக்கூடிய தகைமையிருந்தும் காணி இல்லாத காரணத்தால் அவர்கள் வீடுகளைப் பெறமுடியாது அவலத்தை எதிர்கொண்டு வருகின்றார்கள். எனவே இந்த மக்கள் நீண்ட காலமாக இந்த காணிகளிலே வசிப்பவர்கள் என்ற வகையில் காணிகளின் உரிமையாளர்கள் அல்லது புதிதாக உரிமைகளைப் பெற்றுக்கொண்டவர்கள் மனிதாபிமான நோக்கில் அணுகவேண்டும் எனவும் விலைமதிப்பற்ற தியாகங்கள் நிகழ்ந்த இந்த மண்ணைச்சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் இந்த மக்களையும் நேசிப்பவர்களாக இருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டதோடு

கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் இந்த மண்ணைச்சேர்ந்தவரும் இங்குள்ள வறிய மக்கள் மீது அதிக பற்றும் கொண்டவருமாவார். அவர் இம்மாவட்டத்தில் மனிதாபிமான செயற்பாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்பவர். இந்த மாவட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக மிகப் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கின்றார். அவரின் சேவையை இந்த பெரியபரந்தன் கிராமமும் பெற்றுவருகின்றது. இவ்வாறான நல்லெண்ணம் கொண்டவர்களின் பணிகளே அவலங்களை சுமந்த எமது மக்களின் துயரங்களுக்கு விரைவாக தீர்வைப் பெற்றுத்தரும் எனவும் குறிப்பிட்டார்.

சுமார் 410 இலட்சம் ரூபா செலவில் வடக்கின் வசந்தம் திட்டத்திற்கூடாக பெரிய பரந்தன் கிராமத்திற்கு மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. பரந்தன் பூநகரி பிரதான உயரழுத்த மின் மார்க்கத்திலிருந்து பெரிய பரந்தன் வரை சுமார் இரண்டு கிலோமீற்றர் வரையான உயரழுத்த மின் இணைப்பை ஏற்படுத்தி அதிலிருந்து இரண்டு மின் மாற்றி ஊடாக 18 கிலோமீற்றர்களுக்கு மக்களின் குடியிருப்புகளுக்கான மின் இணைப்புக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் நேற்று பிற்பகல் ஐந்து மணியளவில் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் அவர்கள் பெரிய பரந்தன் கிராமத்திற்கான மின் விநியோகத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் வை.தவநாதன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதிகேதீஸ்வரன் கரைச்சி பிரதேச செயலாளர் நாகேஸ்வரன் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான மனோகரன் மற்றும் கிருஸ்ணசாமி ஆகியோரும் வடக்கின் வசந்தம் மின்பொறியியலாளர் அமிலடயஸ் வடக்கின் வசந்தம் மின் அத்தியட்சகர் சமிந்த கிளிநொச்சி மாவட்ட மின் அத்தியட்சகர் குகராஜ் கிராமசேவையார் சிம்சன்போல் பிரதேசத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts