யாழ்ப்பாணம் குருநகர் ஐந்து மாடிக் கட்டிடத் தொகுதியின் புனரமைப்புப் பணிகளில் பொதுமக்களுக்கு திருப்தியில்லை என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த புனரமைப்புப் பணிகள் தொடர்பில் கண்காணிப்பதற்கு குழுவொன்றையும் நியமித்தார்.
யாழ்ப்பாணம் குருநகர் ஐந்து மாடிக் கட்டிடத் தொகுதியின் மீள்புனரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொருட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குருநகர் தொடர்மாடி முன்பள்ளியில் துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் மாடிக் குடியிருப்புக்களின் மக்களை அமைச்சர் நேற்றய தினம் (07) சந்தித்து கலந்துரையாடியதை அடுத்தே இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், மக்களது நீண்டகாலக் கோரிக்கையின் பிரகாரம் அமைச்சர் விமல் வீரவன்ச அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு அமைவாக இப் புனரமைப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவற்றை சிறப்பானதாகவும், தரமானதாகவும் மக்கள் குடியிருப்புக்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொடுக்க வேண்டுமென்பதே எமது விருப்பமாகும் எனத் தெரிவித்தார்.
இதுவரையில் நடைபெற்று முடிந்த புனரமைப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பாக அங்கு குடியிருக்கும் மக்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்டார்.
மக்களின் கருத்துக்களின் பிரகாரம் வேலைத்திட்டங்கள் தொடர்பில் தமக்கு பூரண திருப்தியில்லையெனத் தெரிவித்த அமைச்சர், தொடரும் வேலைத்திட்டங்களை கண்காணிக்கும் வகையில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, யாழ்.மாநகர சபை, மின்சார சபை, கட்டிடத் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளையும் யாழ். மாநகர சபை உறுப்பினர் துரைராஜா இளங்கோ (றீகன்), மற்றும் மாடி வீட்டுத் திட்ட சங்க செயலாளர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்த அமைச்சர் அவர்கள், மூன்று தினங்களில் நடைபெற்றுள்ள வேலைத்திட்டங்களை இக்குழு கண்காணித்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
குழுவின் பணிகளை நாளைய தினமே ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களின் கோரிக்கைக்கு அமைவாக வீடுகளுக்கான உரிமைப்பத்திரங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.
புனரமைக்கப்பட்டுவரும் குருநகர் ஐந்துமாடி வீட்டுத் தொகுதியில் தற்போது 160 குடும்பங்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, மாநகர ஆணையாளர் பிரணவநாதன் மின்சாரசபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை, கட்டிடத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
குருநகர் தொடர்மாடி வீட்டுத்திட்டத்தை புனரமைக்குமாறு கோரிக்கை