காணாமற்போனோரை தேடியலைவோர் மனநோயாளிகளா? சரவணபவன் எம்.பி

saravanabavan_CIபோரின்போது படையினரிடம் சரணடைந்த எவரும் காணாமற் போகவில்லை என்றால் தங்கள் பிள்ளைகளைத் தேடியலையும் அன்னையரும், தங்கள் கணவர்களைத் தேடியலையும் பெண்களும் மனநோயாளிகளா? என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் ஆதாரங்களுடன் சாட்சியம் அளித்தவர்கள் பொய்யர்களா? காணாமற்போனோர் பற்றிய விவரங்களைக் கோரி இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களும் உண்ணாநோன்புப் போராட்டங்களும் பொழுது போக்குக்காக நடத்தப்படுகின்றனவா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

படையினரை வழிநடத்தும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மட்டும் உண்மை பேசுகிறார். பாதிக்கப்பட்ட பெண்களும் தாய்மார்களும் பொய் பேசுகின்றார்கள் என்றால், உலகம் அதை ஏற்றுக்கொள்ளுமா? என்றும் அவர் தெரிவித்தார்.

வலிகாமம் மேற்குப் பிரதேச சபைக்குட்பட்ட மகளிர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த வைபவம் வழக்கம்பரையில் நடைபெற்றது.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்பது இன ஒடுக்குமுறையில் ஓர் அங்கமாக மாறிவிட்டது. இவ்வாறான நிலையில் அரசியல் விடுதலை முழுமை அடையும்போதே பெண்களின் விடுதலையும் சாத்தியமாகும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் எமது உரிமைப் போராட்டத்தில் பெண்களும் இணைந்து அரசியல் விடுதலை மூலம் பெண்கள் விடுதலையை வெற்றி கொள்ள முடியும். அதற்காக பெண்கள் அணிதிரள வேண்டும்.

உலகம் முழுவதும் மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது. ஆர்ப்பாட்டப்பேரணிகள், கருத்தரங்குகள் கண்காட்சிகள் எனப் பலமுனைகளிலும் பெண்களின் குரல்கள் ஓங்கி, ஒலிக்கின்றன. ஆனால், இன்றுவரை பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் ஒழிந்துபோய்விடவில்லை.

அவை கூடுவிட்டுக் கூடுபாயும் மந்திரவாதியைப் போல் வடிவங்கள் மாறி மாறி வலம்வருகின்றன. எல்லா விதமான ஒடுக்குமுறைகளுக்கும் மேலாக இலங்கைப் பெண்கள் மீது அரச வன்முறைகள் ஏவப்பட்டு தொண்டைக்குழிகள் திருகப்படுகின்றன. எங்கள் பெண்களின் உடல்கள் சிதைக்கப்படுகின்றன. மனங்கள் கசக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

தட்டிக்கேட்க வகையற்றவர்ளாக தடுமாறி துடிதுடிக்க வைக்கப்படுகின்றனர்.

போரைக் காரணம் காட்டி அரசபடைகள் நடாத்திய அகோர வேட்டையில் எங்கள் பெண்கள் கணவன்மாரைப் பறிகொடுத்தனர். தந்தையரை இழந்தனர். கூடப்பிறந்த சகோதரரை இழந்தனர். இன்று பல்லாயிரம் தமிழ்ச் சகோதரிகள் விதவைகளாக, ஆதரிக்க எவருமற்ற அநாதைகளாக, வறுமையிலும் தனிமையிலும் வாடுகின்றனர். அவர்களை அவல வாழ்வுக்குள் தள்ளிய ஆட்சியாளர்கள் அவர்களின் விடிவுக்கு வழிகாட்டவில்லை.

விமோசனத்துக்குக் கரம் கொடுக்கவில்லை. மாறாக அவர்கள் மீது மேலும் மேலும் துயரங்களைச் சுமத்துகின்றனர். இலங்கைப் படையினர் பாலியல் வல்லுறவை ஒரு போர் ஆயுதமாகப் பயன்படுத்தினர் என்று மனித உரிமைகள் காப்பகம் குற்றச்சாட்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.

எங்கள் பெண்கள் எத்தனை பேர் படையினரின் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொல்லப்பட்டனர். எத்தனை பேர் பாலியல் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு, தங்கள் வாழ்வை இழந்தனர். இது இன்னும் எண்ணி முடிக்கப்படாத கணக்கு. ஆனால் அரசு மறுப்பு அறிக்கைகளுக்குள் தன்னை மறைக்க முயல்கிறது.

ஆனால் அவலங்களுக்குள் தள்ளப்பட்டு இன்னும் உயிர் மட்டும் எஞ்சியிருக்கும் பெண்களும், ‘சனல் 4’ வீடியோக் காட்சிகளும் அசைக்க முடியாத சாட்சிகளாக எழுச்சி பெற்று நிற்கின்றன. ‘போரின்போது எவருமே காணாமற் போகவில்லையாம்’ என்று பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்

அதுமட்டுமல்ல அவர் வடக்கு, கிழக்கு தமிழர்களின் பிரதேசம் அல்ல என பொய்யை உண்மையைப் போல் கூறி முழங்கியவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போரின்போது படையினரிடம் சரணடைந்த எவரும் காணாமற் போகவில்லை என்றால் தங்கள் பிள்ளைகளைத் தேடியலையும் அன்னையரும், தங்கள் கணவர்களைத் தேடியலையும் பெண்களும் மனநோயாளிகளா? பாதிக்கப்பட்ட பெண்களும் தாய்மார்களும் பொய் பேசுகின்றார்கள் என்றால், உலகம் அதை ஏற்றுக்கொள்ளுமா?

எங்கள் பெண்கள் தங்கள் பிள்ளைகளை, கணவன்மாரை, தந்தையரை பத்து வருடங்கள், பதினைந்து வருடங்கள் என சிறையில் வாடவிட்டு வறுமையிலும் தனிமையிலும் வாடுகின்றனர். அவர்களை விடுதலை செய்ய அல்லது நீதிமன்றில் நிறுத்தக்கோரி நடத்தப்பட்ட போராட்டங்கள் செவிடன் காதில் ஊதிய சங்காகி வீண்போயின.

அவர்கள் குற்றவாளிகள் தான் என்றால் அரசு ஏன் நீதி விசாரணைக்கு மறுக்கிறது? அப்படிச் செய்வோம், இப்படிச் செய்வோம் என வாக்குறுதி வழங்கிவிட்டு ஏன் காற்றில் பறக்க விடுகிறது?

படுகொலைகள், பாலியல் வன்முறைகள், காணாமற்போகச் செய்தல், நீண்ட காலம் சிறையில் அடைத்து வைத்தல் என்பன அவர்களைப் பாதித்தாலும் அடிப்படையில் துன்பங்களில் இருப்பவர்கள் பெண்களே. பெண்கள் மீதான அரச ஒடுக்குமுறை, பொருளாதார ஒடுக்குமுறை, பாலியல் ஒடுக்குமுறை, உளவியல் அடிப்படையிலான ஒடுக்குமுறை, நடமாட்ட சுதந்திரத்துக்கான ஒடுக்குமுறை எனப் பல வடிவங்களில் விரிகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரச ஒடுக்குமுறைக்கு எதிராக பெண்களின் ஒவ்வொரு அடியும் பெண் விடுதலை நோக்கிய பயணத்தில் நாம் நடக்கும் ஒவ்வொரு படிகள், இப்படியாக எமது தமிழ்ச் சமூகம் ஒடுக்கப்படும் இவ்வேளையில், அந்த ஒடுக்குமுறைகளின் கையாள்கள் அரசுடன் இணங்கிப் போகவேண்டுமென ஓலமிடுகின்றனர்.

ஒடுக்குமுறைகளுடன் இணக்க அரசியல் நடத்தி ஒடுக்குமுறையின் பங்காளிகளாக மாறிவிட்ட இவர்கள் எம்மை இணங்கிப் போகவில்லை எனக் குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் மக்களைப் பொறுத்தவரையில் இணக்க அரசியல் என்பது ஏமாற்றப்படும் அரசியலாக, வஞ்சிக்கப்படும் அரசியலாக, ஒடுக்குமுறைகளை ஆதரிக்கும் அரசியலாகவே வரலாறு முழுவதும் நீண்டு வந்தது.

சிங்கள ஆட்சியாளர்களுடன் சேர். பொன். இராமநாதன் ஓர் இணக்க அரசியலை மேற்கொண்டார். ஆனால் மேல்மாகாண பிரதிநிதித்துவம் தருவதாகக் கூறி ஏமாற்றிய வஞ்சனையால் தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாகவே சட்டசபைத் தேர்தலைப் பகிஷ்கரிக்கும் நிலை தோன்றியது.
அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் டட்லி சேனநாயக்காவுடன் ஓர் இணக்க அரசியலை நடத்தி ஓர் அமைச்சரானார். அவரின் சம அந்தஸ்துக் கோரிக்கை வெற்றி பெறவில்லை. மாறாக மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழரசுக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஓர் இணக்க அரசியலை மேற்கொண்டு அமரர் திருச்செல்வம் அமைச்சரானார். வாக்களிக்கப்பட்ட மாவட்டசபை கிடைக்கவுமில்லை. திருமலை கோணேஸ்வர வலயம் புனித பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்படவுமில்லை.

அல்பிரட் துரையப்பா, அருளம்பலம், தியாகராசா போன்றவர்களும் சிறிமாவோ பண்டாரநாயக்காவுடன் இணக்க அரசியலை நடத்தினர்.
தமிழ் மக்களுக்கு எந்தவொரு விமோசனமுமே கிடைக்கவில்லை. மாறாக புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக்கப்பட்டனர். தரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவர்களின் உரிமை பறிக்கப்பட்டது.

இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஓர் இணக்க அரசியலை நடத்துகிறார். எம்மையும் இணக்க அரசியலில் இணைத்து தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்குத் துணைபோகும் படிக்கு உரத்துக் குரல் எழுப்புகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதையும், பறிகொடுப்பதாகக் கண்ணீர் விட்டவாறே பறிப்பவர்களின் கரங்களுக்கு உரமூட்டி வருகிறார். பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட பொலிஸ், சிவில் நிர்வாக உரிமைகளைப் பறித்த 18 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு அளித்து அமைச்சர் டக்ளஸின் இணக்க அரசியல் பெருமை பெற்றது என்றும் அவர் சொன்னார்.

‘திவிநெகும’ மூலம் மாகாணசபையின் மேலும் பதின்மூன்று அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. அமைச்சரின் இணக்க அரசியல் வடக்கு, கிழக்கை இரண்டாகப் பிரித்தன. தமிழ் மக்களின் ஆணி வேரையே அறுக்கும் இவ்வாறான கைங்கரியங்களுக்கு துணைபோக ஓர் இணக்க அரசியல் தேவையா?

போரின் காரணமாக இடம்பெயர்ந்த வலிகாமம் வடக்கின் மக்கள் இன்றுவரை அகதிமுகாம்களில் அல்லற்படுகின்றனர். வளம் கொண்ட விவசாய பூமி வலிகாமம் வடக்கு மிளகாய், வாழை, மரவள்ளி என இலங்கைப் பொருளாதாரத்துக்கு வளம் சேர்த்த மண் இது. மாவிட்டபுரம் வெற்றிலை என்ற சொல் கேட்டாலே நாவில் நீர் ஊறும். வளம் அள்ளித் தந்த அந்த மண் இன்று இராணுவ ஆக்கிரமிப்பில் சிக்கிக் கிடக்கிறது. மயிலிட்டியின் மீன் வரவுக்காக ஒரு காலத்தில் கொழும்புச் சந்தை காத்துக்கிடக்கும்.

அலையடிக்கும் அந்தக் கடற்கரை மண் இன்று ஆக்கிரமிப்பாளர்களின் பாதங்களில் சிதைகிறது. இருபத்துமூன்று ஆண்டுகள் கடந்த பின்பும் அங்கு மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்படவில்லை.

அந்த மக்கள் தாம் பிறந்து வளர்ந்து தொழில் செய்து வாழ்ந்த இந்தப் பூமியைக் கேட்டு நடத்தும் போராட்டங்கள் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குழப்பும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

அந்த மக்களுக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒருமுறை தானும் குரல் கொடுத்தாரா? ஒரு விரலை அசைத்தாவது ஆதரவு கொடுத்தாரா? அமைச்சரவையில் ஒரு கோரிக்கை முன்வைத்தாரா?

இன்று நாவற்குழியில் சிங்களக் குடியேற்றம், கிளிநொச்சியில் சிங்களக் குடியேற்றம், மணலாற்றில் சிங்களக் குடியேற்றம், முள்ளியவளை தமிழ் மக்கள் 1972 தொடக்கம் குடியிருந்த ஐயனார்புரத்தில் முஸ்லிம் குடியேற்றம். ஒட்டுமொத்தத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயக பூமியிலேயே இன விகிதாசாரத்தை மாற்றி தமிழ் மக்களை சிறுபான்மையினராக்கிப் பலவீனப்படுத்தும் சதி அரங்கேற்றப்படுகிறது.

எல்லாவற்றையும் பறித்து தமிழ் மக்களைப் படுகுழியில் தள்ளும் இந்த இணக்க அரசியல் தேவைதானா? இது இணக்க அரசியலா அல்லது துரோக அரசியலா? அண்மையில் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மன்னார் அடம்பனில் குடிதண்ணீர்த் திட்டத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அபிவிருத்தியில் ஒரு கல்லையாவது தூக்கிப்போட்டார்களா எனக் கேள்வி எழுப்பினார்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆட்சியாளர்கள், மக்களிடம் வரி வாங்குபவர்கள் ஆட்சியாளர்கள், வெளிநாடுகளில் கடன்பெறுபவர்கள் ஆட்சியாளர்கள். அபிவிருத்திகளை மேற்கொள்ளவேண்டிய கடமை அவர்களுடையதே. எந்தவித அதிகாரமும் இல்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எப்படி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்?

மாவட்டப் பிரதேச அபிவிருத்திக் கூட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அழைக்கப்படுவதில்லை. அப்படி அவர்கள் கலந்து கொண்டாலும் அவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்துகொண்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்துக்குக் கூடத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை.

இப்படியான ஒரு திட்டமிட்ட புறமொதுக்கல் நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் ஒரு கல்லை என்ன, ஒரு துரும்பைக்கூட அபிவிருத்தியில் தூக்கிப்போட முடியுமா? தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தெரிவுசெய்தமை அபிவிருத்தி என்ற பேரில் அடிவருடி அரசியல் நடத்தவல்ல. இழந்துபோன உரிமைகளை மீண்டும் பெற, பறிபோகும் தாயக மண்ணைத் தடுத்துக் காக்கவே.

அகன்ற வீதிகள், உயர்ந்த கட்டடங்கள் இவை மட்டும் அபிவிருத்தியாகிவிட முடியுமா? அபிவிருத்தி என்பது அலங்காரக் காட்சிகளும், அழகுக் கோலங்களுமா? மக்களின் உரிமைகள் கிட்டும்போது, வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் போதுதான் மக்கள் அகன்ற வீதிகளின் பயன்களை அனுபவிக்க முடியும். உயர்ந்த கட்டடங்களில் நம் தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமா?

தனது சொந்தக் காணிக்குப் போக அனுமதிக்கப்படாத ஒருவனுக்கு அகன்ற வீதியால் என்ன பயன்? தனது சொந்தத் தொழிலைச் செய்ய அனுமதிக்கப்படாத ஒருவனுக்கு உயர்ந்த கட்டடங்களால் என்ன பயன்? இன்று பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்பது இனஒடுக்குமுறையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. எனவே அரசியல் விடுதலை முழுமையடையும்போதே பெண்களின் விடுதலையும் சாத்தியமாகும்.

எனவே, எமது உரிமைப் போராட்டத்தில் பெண்களும் ஆயிரமாயிரமாய் இணைந்து அரசியல் விடுதலை மூலம் பெண்கள் விடுதலையை வெற்றிகொள்ள அணி திரளுமாறு அன்புடனும், உரிமையுடனும் அழைக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts