கல்வித் துறைசார் செயற்பாடுகள் சிறந்த படைப்பாளிகளை எதிர்காலத்தில் உருவாக்கும்.- ப.விக்கினேஸ்வரன்

கல்வித் துறைசார் செயற்பாடுகள் சிறந்த படைப்பாளிகளை எதிர்காலத்தில் உருவாக்கும். கல்வியுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகளும் சிறந்த மாணவர்களை உருவாக்குவதுடன் எதிர்காலத்தில் கல்விசார் செயற்பாடுகள் நிறைந்த சமூகத்தையும் உருவாக்க முடியும் என்று வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிச்செயலர் ப.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண கல்வித் திணைக்கள ஆரம்பப் பிரிவினால் சிறுவர் பரிசளிப்பு விழா சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் அண்மையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே விக்கினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

ஆரம்பப் பிரிவு மாணவர்களால் உருவாக்கப்பட்ட சித்திரங்களில் சிறந்ததைத் தெரிவு செய்வதில் தேர்வுக் குழுவினர் எவ்வளவு சிரமங்களை எதிர்நோக்கியிருப்பர் என்பதை உணரமுடிகிறது. இளவயதில் மிகத் துல்லியமாக உருவாக்கப்பட்ட படைப்புகள் ஒவ்வொன்றும் மாணவரின் கலைத்திறனை வெளிக்கொணர வைத்துள்ளன.

விழாவில் மேடையேற்றப்பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளும் எமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியனவாக இருந்தன. சகல மாணவரும் தாம் பங்குபற்றிய பாத்திரங்களைப் பொறுப்புணர்ந்து அதற்கேற்ற வகையில் செய்து முடித்துள்ளனர்.

சிறிய வயதில் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, அதன் பிரகாரம் சிறிதும் பிறழ்வு ஏற்படாது நடித்துக் காண்பித்துள்ளனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கு மாணவர்களை உருவாக்கிய ஆசிரியர்களும் பெற்றோர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

தற்போதைய காலத்தில் கணினியின் செயற்பாடுகள் அனைவராலும் விரும்பப்பட்டு வருகின்றன. கணினியில் உள்ள பல பிரிவுகள் சிறுவர்கள் மத்தியில் விரும்பப்படுகின்றன. பெற்றோர் ஆசிரியர்களுக்குத் தெரியாத பல விடயங்களைச் சிறுவர்கள் வெளிக் கொணர்வதைக் காணமுடிகிறது.

இள வயதினரின் திறமைகளை இனங்கண்டு அவற்றை அவர்களிடம் வளர்க்க அனைவரும் பாடுபடவேண்டும். குழந்தைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நாட்டுக்குச் செய்யும் பெரிய சமூகத் தொண்டாகும் என்றார்.

Related Posts