கல்கோவன்,றுக்ஸ்மன் அதிரடி யாழ்.இந்து வரலாற்று வெற்றி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கும் இடையிலான ஒரு நாள் துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 433 ஓட்டங்கள் வித்தியாசத்தில் யூனியன் கல்லூரி அணியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கும் இடையிலான 50 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட ஆட்டம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி அதிரடி வேட்டை நடத்தி 491 ஓட்டங்களைக் குவித்தது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சார்பில் துடுப்பாட்டத்தில் கல்கோவன் 77 பந்துகளைச் சந்தித்து ஒரு சிக்ஸர், 21 பவுண்டரிகள் அடங்கலாக 115 ஓட்டங்களையும் அவருக்கு இணையாக ஆடிய றுக்ஸ்மன் 66 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கலாக 106 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இவர்களுடன் சஜீகன் 61 பந்துகளில் 89 ஓட்டங்களையும், பிருந்தாபன் ஆட்டமிழக்காது 63 பந்துகளில் 86 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 50 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 6 இலக்குகளை மாத்திரம் இழந்து 491 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் யூனியன் கல்லூரி சார்பாக லனுசன் 4 இலக்குகளைச் சரித்தார்.
492 என்னும் இமாலய இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய யூனியன் கல்லூரி அணி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் துல்லிய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 58 ஓட்டங்களுக்குள் சகல இலக்குகளையும் இழந்து 433 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சார்பாக துடுப்பாட்டத்தில் நிதர்ஷன் 17, அனிஸ்ரன் 14 ஓட்டங்களை அதிக பட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் யாழ். இந்து சார்பில் சாரங்கன் 3, சிந்துஜன் 2 , வைகரன் 2 இலக்குகளை கைப்பற்றினர்.

இலங்கைப் பாடசாலை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் வரலாற்றில் ஆகக் கூடிய ஓட்டங்களால் வெற்றியீட்டிய அணி என்ற சாதனையை யாழ்.இந்துக் கல்லூரி அணி பெற்றுள்ளது.

Related Posts