ஒரே நாடு ஒரே மக்கள் என்று அரசாங்கம் கூறுவது உண்மையல்ல – பொ. ஐங்கரநேசன்

போருக்குப்பின்னர் ‘ஒரே நாடு ஒரே மக்கள்| என்று அரசாங்கம் உரக்கக் கூறிவருகிறது. உண்மையில் அப்படி இல்லை. தமிழர்கள் நாங்கள் சிங்களச் சகோதரர்களிம் இருந்து பேசும் மொழியால், வாழும் இடத்தால், கைக்கொள்ளும் பண்பாட்டால் வேறுபட்டவர்கள் என்பதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ankaranesa-2

அதன் அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்கு நீதியான, நிலையான அரசியல் தீர்வை வழங்கினால் மாத்திரமே விவசாயத்தில் மாத்திரம் அல்ல எல்லாத் துறைகளிலும் நிலைத்த அபிவிருத்தி சாத்தியமாகும் என்று வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார்.

ஏழாலை மயிலங்காட்டுப்பகுதியில் நேற்று வியாழக்கிழமை (09.01.2014) உருளைக்கிழங்குச் செய்கையை ஊக்குவிக்கும் வயல்விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

போருக்கு முன்பு யாழ்.மாவட்டம் அதிக அளவில் உருளைக்கிழங்குப் பயிர்ச் செய்கையை மேற்கொண்டிருந்தது. எமது விவசாயிகள் உருளைக்கிழங்கால் அதிகம் சம்பாதித்தார்கள். ஆனால், இன்று வெறுமனே 200 ஏக்கர் பரப்பளவில் 160 மெற்றிக் தொன்கள் விதை கிழங்குகள் நடுகை செய்யப்பட்டுள்ளன. இதில் 132 மெற்றிக் தொன்களை இலங்கை அரசாங்கம் இறக்குமதிசெய்து மானிய விலையில் எமக்குத் தந்து உதவியுள்ளது. இதன் மொத்தப் பெறுமதி 33 மில்லியன் ரூபாய்கள். இதில் அரைவாசியை அதாவது 16.5 மில்லியன் ரூபாய்களை மத்திய அரசு பொறுப்பேற்க மீதி அரைவாசியை எமது விவசாயிகள் செலுத்திப் பெற்றுக்கொண்டார்கள்.

வருங்காலத்தில் உருளைக்கிழங்குச் செய்கையில் தன்னிறைவு காண இங்கே வருகை தந்திருக்கும் மத்திய அரசின் பிரதிநிதிகள் தங்கள் ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

வடக்கு மாகாண சபை அமைக்கப்பட்டதற்குப் பிறகு மத்திய விவசாய அமைச்சின் பிரதிநிதிகளை நான் சந்திக்கும் முதலாவது நிகழ்ச்சி இது. அந்த வகையில், அவர்களுக்கும் சில விடயங்களை இந்த நிகழ்ச்சியின்போது நான் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

‘ஒரே நாடு ஒரே மக்கள்’ என்ற அரசின் கோஷம் எவ்வளவு பொருத்தமற்றது என்பதற்கு உதாரணமாக, இந்த நிகழ்ச்சியின் மையப் பொருளாக அமைந்திருக்கும் உருளைக்கிழங்கு தொடர்பான ஒரு வரலாற்று உண்மையை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அயர்லாந்து மக்கள் உணவில் பல்வகைத் தன்மையைக் கடைப்பிடிக்காமல் உருளைக்கிழங்குகளையே ஒரே உணவாக நம்பி வாழ்ந்தார்கள். ஒரு நாளில் ஒருவர் 4.5 கிலோ கிராம் உருளைக்கிழங்குகளை சாப்பிடும் அளவுக்கு உருளைக்கிழங்குகளையே தனித்த உணவாகப் பயன்படுத்தினார்கள். 1845ஆம் ஆண்டில் உருளைக்கிழங்குச் செடியில் ஏற்பட்ட பின்வெளிறல் நோயால் உருளைக்கிழங்குகளின் உற்பத்தி வெகுவாகக் குறைய பட்டினியாலும் போசாக்கின்மையாலும் ஏறத்தாழ ஒரு மில்லியன் பேர் இறந்து போனார்கள்.

இதற்கும் அதிகமான மக்கள் ஏதிலிகளாக இடம்பெயர்ந்தார்கள். 160 ஆண்டுகள் கழித்து 2006 ஆம் ஆண்டுதான் அயர்லாந்து சனத் தொகையில் தன் பழைய நிலைக்குத் திரும்பியது.

உணவில் பல்வகைமை எவ்வாறு இன்றியமையாததோ அதே போன்றுதான் ஒரு தேசத்தின் இருப்புக்கும் அங்குவாழும் இனங்களின் பல்வகைமையைப் பேணுவது அவசியமானது.இலங்கைத் தீவின் நிலையான அமைதிக்கும் அபிவிருத்திக்கும் இனங்களுக்கிடையேயான பல்வகைமையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்வது இன்றியமையாதது என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

சத்தமில்லாத போராக எமது விவசாயத்தை நசுக்குகின்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன – விவசாய அமைச்சர்

Related Posts